சொல்லி அனுப்புதல்
ஏஞ்சலினைப்
பார்க்க நேர்ந்தால்
கேட்டதாகச் சொல்லவும்
என மிகுந்த கணிவுடன்
அவள் சொல்லியனுப்பிய
தகவலுடன் நாள் முழுவதும்
பேராசையுடன் அலைந்து திரிந்து
வேலைகளில் தோய்ந்து
பற்பல முகங்களைக் கடந்து
பொழுது தீரும் வேளையில்
சட்டென ஞாபகமுற்றாள் ஏஞ்சலின்.
எந்த ஏஞ்சலின்
என்கிற எந்தத் தகவலும்
இல்லை என்னிடம்.
நகரின் வெயிலுக்குள்
ஒரு பழக்கடையின் முன்னே
அவள் நின்றிருக்கக்கூடும் அல்லது
நாளிதழ் கடையின் உள்ளே
கால் மேல் காலிட்டு
பகலை மென்றிருப்பவளாக இருக்கக்கூடும்.
மீண்டுமொரு பொழுதில்
ஏஞ்சலின் பற்றி அவள் சொல்லக்கூடும்
அல்லது வேறு பெயரை உச்சரிக்கக்கூடும்.
எப்பொழுதும் ஏதாவது ஒரு பெயரை
அவள் சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.
இன்றிரவு
அவள் அழைத்து
ஏஞ்சலினைப் பார்த்தாயா எனக் கேட்பாள்.
– கே.பாலமுருகன்