மின்கிறுக்கல்

நிலையற்று கடக்கிறேன்

குளிர் காற்றில் நடுங்குகிறேன்
உடல் நழுவுகிறது
உயிர் மெல்ல எட்டிப் பார்க்கிறது.
பூ வீழ்கையில் நீர் ஆடி சலனமுறுகிறது
நீந்தும் குறுமீன்களின் மத்தியில் அதிர்வு பரவுகிறது
சிறு பதட்டம் உண்டாகி நதி சற்று நடுங்கி ஓய்கிறது.
தாகத்தோடு அலைகிறது காக்கை
பானை நிரம்ப தண்ணீர் இருக்கிறது
காக்கைக்கு கண்கள் குருடாய் இருக்கின்றன.
புறக்கணிக்கப்பட்டான்
பட்டினியோடு வாழ்ந்தான்
சவமேட்டில் சிறு புல்லாய் சிரிக்கிறான்.
கறுப்பு வெளுப்பு செகப்பு
மறுப்பு வெறுப்பு எதிர்ப்பு
நிறத் துவேஷம் வேண்டாம் நாய்க்குரைப்பு.
சோத்தால் அடித்த பிண்டங்கள்
கள்ளப் பணத்திற்கு விற்கிறார்கள்
வாக்குரிமை சீப்பட்டுச் சின்னக் கழுத ஏறுகிறது.
பழைய புதிய பூட்டுகளுக்குச் சாவிகள் வைத்திருப்பவன் சந்தையில் இருந்தான்
ஆயிரம் பூட்டுகள் ஆயிரம் சாவிகள் அவனிடம் இருந்தன
மரண ஜனன வீடுகளின் பூட்டுகளுக்கான சாவிகள் மட்டும் இல்லையென்றான்.
மெளனமாய் ஓடவில்லை நதி
கசப்பை மென்று கொண்டே செல்கிறது
உறங்க நினைத்தாலும் கரைகள் விடுவதில்லை.

Exit mobile version