மின்கிறுக்கல்

நான் விரும்பும் காந்தி

குறிப்பு சட்டகம்:

முன்னுரை:

மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சத்தியாகிரகம் என்றழைகைப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே மட்டுமல்லாமல் இந்திய நாடு விடுதலை பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால் இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என இந்திய மக்களால் போற்றப்படுகிறார். அகிம்சை எனும் மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி விடுதலைக்கு காரணமாக இருந்ததால் இவருடைய தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியடிகள். அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.

பிறப்பு : அக்டோபர் 2, 1869

இடம் : போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா

பணி : இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர்

இறப்பு : ஜனவரி 30, 1948

பிறப்பு :

    மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்ற இடத்தில் கரம்சந்த் காந்திக்கும் புத்திலிபாய் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சந்த் காந்தி போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

    மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி அவர்கள் பள்ளியில் படிக்கும் போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாய் அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். அவர் பதினெட்டு வயதில் கல்வி கற்க இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

காந்தியின் தண்டி யாத்திரை:

    1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால் இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள் தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா எனக் கருதி சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் இரண்டாம் தேதி அகமதாபத்திலிருந்து சுமார் 240 மைல்கள் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடை பயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்கு பிறகு தண்டியை வந்தடைந்த அவர் அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவின் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்தது. காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உப்பு வரியை திரும்பப் பெற்றுக்கொண்டனர். உப்புசத்தியாக்கிரகம் என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்:

    1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ஆகஸ்ட் புரட்சி என அழைக்கப்படும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும் அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. ஆனாலும் இந்திய-பாக்கிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.

இறப்பு:

    அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்த மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள். (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சு.ராஜேஷ்குமார்

ஆறாம் – வகுப்பு

அரசினர் உயர்நிலைப்பள்ளி,

சிந்தம்பட்டி, முசிறி, திருச்சி.

Exit mobile version