மின்கிறுக்கல்

நான்காம் பரிமாணம் – 56


இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். இன்று விட அதிகாரம் என்றும் தலைப்பைத் தொடங்க உள்ளோம். விடம் என்னும் சொல்லுக்கு விஷம், நஞ்சு என்று வேறு பல பெயர்களும் உண்டு.  இதற்குள் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் அபரிமிதமாக உள்ளது தெரியுமா?. சரி. கட்டுரைக்குள் செல்வோம்.

தொடக்கம்


நஞ்சு என்றால் என்ன? எந்த ஒரு பொருளும் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு காரணத்துக்காகத்தான் உருவாக்கப்படுகிறது. அந்த காரணத்துக்கு உண்டான செயல் தொடங்கியவுடன் பலகோடி நூற்றாண்டுகளுக்கு கூட செயல்பட்டுக் கொண்டே இருக்க முடியும். ஆனால் எவ்வளவு காலம் ஆனாலும் இறுதியில் ஏதோ ஒரு பொருளால் அந்த செயல் முடித்து வைக்கப்பட வேண்டும். அவ்வாறு முடித்து வைக்க பயன்படும் பொருள் தான் நஞ்சு அல்லது விடம் எனப்படுகிறது. 

இந்த பிரபஞ்சம் தொடங்கியவுடன் கோடிக்கணக்கான நட்சத்திரங்களாக பிரிந்து சென்று ஒவ்வொன்றும் அணுப் பிளவு மற்றும் சேர்க்கை ஆகிய இரண்டு வினைகளால் ஒளிர ஆரம்பித்தது. இது உங்கள் வீட்டில் இருக்கும் அடுப்பெரிக்கும் செயல் போன்றது கிடையாது. ஒவ்வொரு நட்சத்திரத்தில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் தன்னுடைய சொந்த ஈர்ப்பு விசையால் ஒன்றோடு ஒன்று இணைந்து இறுகி அணுக்களின் சேர்க்கை ஏற்பட்டு அதிலிருந்து ஒளியும் வெப்பமும் ஏற்படுகிறது. முதலில் இரண்டு சிறிய அணுக்கள் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய அணுவை உருவாக்கும். அந்த நட்சத்திரத்தில் உள்ள அனைத்து சிறிய அணுக்களும் தீர்ந்து போன பின்பு புதிதாக உருவாக்கப்பட்ட அந்த பெரிய அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து புதிய ஒரு வினையை உருவாக்கி எரிந்து கொண்டே இருக்கும். அப்படியானால் இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? கண்டிப்பாக உண்டு. அந்த நட்சத்திரத்தின் கதையை முடித்து வைப்பதற்கு அதனுள்ளேயே உருவாகும் ஒரு விஷம் தான் இரும்பு! உலோக இரும்பை நீங்கள் அன்றாடம் பல்வேறு செயல்களுக்கும் பயன்படுத்திக் கொண்டு வருகிறீர்கள் அல்லவா? உங்கள் உடலில் ரத்த ஓட்டம் ஏற்படுவதற்கு காரணம் கூட இரும்புத்தாது தான். அப்படிப்பட்ட இரும்பு எந்த ஒரு நட்சத்திரத்திலும் (சூரியன் உட்பட) அதிகமாக உருவாகும் பட்சத்தில், அது ஒரு நஞ்சாக மாறி அந்த நட்சத்திரத்தின் செயல்பாட்டை முழுவதுமாக முடக்கி இறுதியில் அணைத்துவிடும். உங்கள் உடல் மூச்சு விடுவதற்கு இன்றியமையாததாக இருக்கும் இரும்பு தாது பொருள் ஒரு நட்சத்திரத்தை முழுவதுமாக அனைத்து விடக்கூடிய சக்தி கொண்டது!. ஆகவே இரும்பு உங்கள் உடலில் உயிர் காப்பாளராக இருந்தபோதிலும் நட்சத்திரங்களின் விடமாக மாறி விடுகிறது. இதிலிருந்து உங்களுக்கு ஒன்று புரிந்து இருக்கலாம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் பொதுவான ஒரு நஞ்சு என்று கிடையவே கிடையாது. ஒரு உயிரை காப்பாற்றும் பொருள் மற்றொரு இடத்தில் அழிக்கும் நஞ்சாக மாறிவிடுகிறது!

நஞ்சு என்பது புதிதாக வெளியிலிருந்து வரும் ஒரு மாற்றுப் பொருள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது முற்றிலும் தவறானது. எந்த ஒரு பொருளுக்கு உள்ளேயும் நஞ்சு வேறு ஒரு உருவத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு உருளைக்கிழங்கு தான். நீங்கள் கடையில் இருந்து சாதாரண உருளைக்கிழங்கு வாங்கி அதனை சமைத்து பல ருசியான பதார்த்தங்களை உருவாக்கி சாப்பிட்டிருப்பீர்கள். அதே உருளைக்கிழங்கை சுமார் ஒரு மாத காலம் ஓரளவுக்கு ஈரப்பதம் இருக்கக்கூடிய இடத்தில் வைத்து விட்டீர்கள் என்றால் அதிலிருந்து உருளைக்கிழங்குச் செடி முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போது வேறு ஒரு விஷயமும் நடக்கும். அந்த உருளைக்கிழங்கு மேற்பரப்பில் சில இடங்களில் செடிகளின் வேர் மற்றும் தண்டுப்பகுதி உருவாக ஆரம்பிக்கும். அதே சமயத்தில் உருளைக்கிழங்கின் மேற்பரப்பிலுள்ள மற்ற பகுதிகளில் அதன் நிறம் பச்சையாக மாறும். மிகவும் குறைவான அளவில் அதனை நீங்கள் சாப்பிட்டால் உங்களுக்கு வாந்தி மயக்கம் போன்ற பிரச்சனைகள் வரலாம். ஆனால் சற்று அதிகமாக அந்த பச்சை நிற உருளைக்கிழங்கை நீங்கள் சமைத்து சாப்பிட்டாலும் கூட உயிருக்கு உலைவைக்கும் அளவிற்கு மிகவும் கொடிய நஞ்சான சொலாநைன்(Solanine) உங்களை பதம் பார்த்து விடும். நீங்கள் கடையில் இருந்து புதிதாக வாங்கி வந்த பொழுது அந்த பச்சை நிற நஞ்சு எங்கே இருந்தது? அதே உருளைக்கிழங்குக்கு உள்ளே நீங்கள் ருசித்து சாப்பிடும் மாவுச்சத்தாக இருந்தது. அப்போது நீங்கள் உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் உங்கள் உடம்புக்கு சக்தியாக மாறி இருக்கும் அதே பொருள், சில காலத்தில் நஞ்சாக மாறியது ஏன்?

உருளைக்கிழங்கு புதிதாக உருவாகிய உடன் விலங்கு மற்றும் பறவைகள் அதனை தேடிவந்து உண்ணத் தொடங்கும். அப்படி உண்ணும் பொழுது சிதறும் மிச்சம் மீதப் பொருட்கள் விலங்குகளால் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புதிய செடிகளை உருவாகும். இதன்மூலம் உருளைக்கிழங்கு தன்னுடைய குடும்பத்தை தழைத்து வாழ வைக்கிறது. ஆனால் சிறிது காலம் சென்ற பிறகு அந்த உருளைக்கிழங்கு ஒரு புதிய செடியை உருவாக்க முயல்கிறது. அந்த சமயத்தில் நீங்கள் அதனை தின்றால் செடி உருவாகும் முயற்சி வீணாகி விடும் அல்லவா? அதனால் மற்ற யாரும் சாப்பிட முடியாதபடி கொடிய விஷத்தை அதன் மேலே உருவாக்கி படரவிட்டு கொள்கிறது! இவ்வளவு அறிவுபூர்வமாக இருக்கும் உருளைக்கிழங்கு செடியை விட மனிதன் அதிக மூளை உள்ளவன் அல்லவா? அந்த விஷத்தை முறியடிக்கும் விதத்தை ஆதி பழங்குடி மக்கள் கண்டுபிடித்து விட்டனர். அதாவது பச்சை நிறம் அடைந்த உருளைக்கிழங்குகளை தண்ணீர் இல்லாத குளிரான பகுதியில் புதைத்து விட்டால் சிறிது நாட்களிலேயே அந்த உருளைக்கிழங்கு சுருங்கி அந்த விஷம் தானாகவே முறிந்துவிடும். பின்பு எப்போதும் போல உங்களால் அதனை சமைத்து சாப்பிட முடியும். இங்கே உள்ள அதிசயத்தை பாருங்கள். உருளைக்கிழங்கில் இருந்து உருவாக்கிய விஷமானது உருளைக்கிழங்குக்கு உள்ளேயே மறைந்து விட்டது. இது எப்படி சாத்தியம்? அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

Exit mobile version