மின்கிறுக்கல்

நான்காம் பரிமாணம் – 3

Wave

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

நான்தான் காலம் பேசுகிறேன். எனது பார்வையில் நான் கண்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து உங்களுடன் கூறிக்கொண்டு வருகிறேன். சென்ற பகுதியில் மொழியின் ஒலியியல் பற்றியும் ஆங்கில மொழி உருவான கதையை பற்றியும் உங்களுக்கு கூறினேன். சமகாலத்தில் உருவாகிய பல்வேறு மொழிகளுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக கூறினேன். அது எப்படி என்று கூறுகிறேன் கேளுங்கள்.

மொழியின் வீச்சு மற்றும் அலைவரிசை

ஒரு மொழியை உச்சரிப்பதற்கு உங்கள் தலைப்பகுதியில் உள்ள தொண்டை, உள்நாக்கு, நாக்கு, பற்கள், முகவாய்க்கட்டை மற்றும் வாய் பகுதிகள் முக்கியமானது. இவற்றின் துணைகொண்டு உங்களால் எந்த ஒரு சத்தமும் எழுப்ப முடிகிறது. உங்கள் வாயால் எந்தெந்த சத்தத்தை எழுப்ப முடியும் என்பதையும் இந்த உடற்கூறுகளே முடிவு செய்கிறது. இந்த சத்தங்களை உங்கள் அறிவியலில் வீச்சு மாற்றம் (amplitude variation) என்று கூறுகின்றனர். நீங்கள் வாழும் காலத்திற்கு 20 லட்சம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஆதி மனிதனாகிய Homo Erectusன் தலைப்பகுதியும் உங்கள் தலைப் பகுதியும் கிட்டத்தட்ட ஒரே அமைப்பை கொண்டதாகும். இதன் மூலம் சுமார் 20 லட்சம் வருடங்களாக உங்களால் எழுப்ப முடிந்த ஒலிகள் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம். இப்படி உங்கள் வாயால் கட்டமைக்க முடிந்த ஒலிகளை வைத்துக் கொண்டு பல்வேறு மொழிகளையும் சமகாலத்தில் நீங்கள் உருவாக்கினீர்கள். பல் வேறு மொழிகள் உருவாகினாலும், அனைத்து மொழிகளுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, உங்கள் உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் முதலெழுத்தாக ‘அ’ எனும் எழுத்துதான் உள்ளது. ஏனென்றால், ஒரு மனிதன் தனது வாயால் வேறு எந்த அசைவும் இல்லாமல் காற்றை வெளியிடும்போது ‘அ’ எனும் ஒலி இயற்கையாக உண்டாகிறது. ‘அ’ என்று சொல்லும்போது வாயை மூடினால் ‘ம்’ என்ற ஒலி உண்டாகிறது. இந்த ‘அம்’ எனும் ஒலியை மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு விலங்கினங்களும் எளிதாக உருவாக்குகின்றன. இந்த எளிதான ஒலியே குழந்தைகள் சொல்லும் முதல் சொல்லாகிய ‘அம்மா’ என்று உருவாகி அது தாயை குறிப்பதற்கும் பயன்படுகிறது. அதனால் தான் உலகில் உள்ள பெருவாரியான மொழிகளிலும் ‘அம்’ எனும் ஒலியை முதலாகக் கொண்டு தாயை குறிப்பதற்கான சொல் உருவானது.

ஆங்கிலத்தில் நாக்கை அதிகம் பயன்படுத்தாமல் உருவாக்கக்கூடிய ஒலிகளின் மூலம் உள்ள எழுத்துக்களை vowels (a,e,i,o,u) என்று அழைக்கிறீர்கள். நாக்கை முழுவதும் பயன்படுத்தாமல் எளிய முறையில் பேசி வந்த ஆதிமனிதன் பின்பு நாக்கை பல்வேறு விதமாக சுழற்றி புதிய ஒலிகளையும் உருவாக்கினான். இந்தப் புதிய எழுத்துக்கள் வந்ததனால், பல்வேறு முறையில் எழுத்து வரிசைகளை மாற்றி அமைத்து அதன்மூலமாக கருத்துக்களை மனிதனால் பரிமாற முடிந்தது. என்னதான் புதிய எழுத்துக்கள் உருவாக்கினாலும், நாக்கை அதிகம் பயன்படுத்தாமல் பேசும் ஆதி எழுத்துக்களை மனிதன் அதிகமாக பயன் படுத்திக் கொண்டு வருகிறான். இந்த எழுத்துக்களை தமிழில் உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கிறீர்கள். உங்கள் மதங்களில் நீங்கள் அதிகம் பயன்படுத்தும் ஓம், ஆமென், ஆமீன் என்பதுகூட’அம்’ எனும் ஒலியின் திரிபே ஆகும்!

நீங்கள் எவ்வளவு புதிய எழுத்துக்களை உண்டாக்கினாலும் உங்கள் காதுகளுக்கு கேட்கக்கூடிய 20Hz முதல் 20,000 Hz எனும் அலைவரிசைக்குள் மட்டுமே ஒலியை உருவாக்கமுடியும். இது உங்கள் உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது. இந்த விஷயத்தில் பல்வேறு விலங்குகளும் பூச்சிகளும் உங்களைவிட அதிகமாக பேசும்/கேட்கும் திறன் கொண்டுள்ளது. ஒரு எலியால் 90,000 Hz வரை ஒலியைக் கேட்க முடியும். வௌவால்கள் ஆல் 1,10,000 Hz வரை கேட்க முடியும். 20,000 Hz வரை மட்டுமே கேட்க முடிந்த உங்களால் பல்வேறு மொழிகளை உண்டாக்க முடியும் என்றால் எலிகளும் வௌவால்களும் எத்தனை மொழிகளை உண்டாக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் பேசும் மொழிகள் அனைத்தும் உருவாவதற்கு பல்லாயிரம் வருடங்கள் ஆகி வருகிறது. உங்களின் பரிணாம வளர்ச்சி மற்றும் தேவைக்கு ஏற்ப அதனை தொடர்ந்து மாற்றிக் கொண்டு வருகிறீர்கள். இப்படி இயற்கையாக வளரும் மொழியை, செயற்கையாகவும் உருவாக்க முயற்சி செய்துள்ளீர்கள். அது எப்படி என்று சொல்கிறேன் கேளுங்கள்.

பாஷா இந்தோனேசியா

ஆசியக் கண்டத்தின் தென்கிழக்கு மூலையில் இருக்கும் தீவுக் கூட்டங்களில் ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு புதிய மொழி உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட மொழிகளால் ஒரு பிரச்சனையும் உருவானது. ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவிற்கு சென்று பேச வேண்டும் என்றால் அங்கு உள்ள மனிதர்கள் ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். வாணிபம் செய்வதற்கு இது மிகவும் இடைஞ்சலாக இருந்தது. காலப்போக்கில் சில மொழிகள் அழிந்தும், சில மொழிகள் அதிகமாக பரவியும், இந்த தீவுக் கூட்டங்களில் சுமார் 700 மொழிகள், கடந்த சில நூற்றாண்டுகளாக பேசப்பட்டு வந்தது. இந்த காலகட்டத்தில் தான், இந்த தீவுக் கூட்டத்தில் வடபகுதி முழுவதும் (இன்றைய மலேசியா மற்றும் சிங்கப்பூர்) ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்கு அடியில் வந்தது. தென்பகுதி முழுவதும் (இன்றைய இந்தோனேசியா) டச்சுக்காரர்கள் கட்டுப்பாட்டில் வந்தது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளிலும் ஆங்கிலம் பரவி வந்ததால் மலேசியா மற்றும் சிங்கப்பூரில், ஆங்கிலம் ஒரு அலுவல் (இந்தியாவிலும் கூட) மொழியாக மாறியது. ஆனால் இந்தோனேஷியாவில் டச்சு ஒரு அலுவல் மொழியாக என்றுமே மாறியதில்லை. இதற்குப் பின் ஒரு சுவாரஸ்யமான கதையும் உள்ளது.

இந்தோனேசியா சுமார் 14000 தீவுகளை கொண்ட ஒரு தீவுக் கூட்டம் (Archipelago) ஆகும். இதில் அதிகம் பேசும் மொழியாக (40%) ஜாவா மொழியை பயன்படுத்தி வந்தனர். ஜாவாவை தவிர பலநூறு மொழிகளும் இங்கு பேச்சு வழக்கில் இருந்தது. இதனால் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பதற்காக அங்கே உள்ள மக்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு ஆராய்ச்சி இயக்கத்தை உருவாக்கினர். இதன் மூலமாக இந்த தீவுக் கூட்டம் அனைத்திற்கும் ஒரு பொதுவான மொழியை புதிதாக கட்டமைக்க வேண்டும் என்றும் அதற்காக உலகிலுள்ள பல மொழி அறிஞர்களை வரவழைத்து ஆராய்ச்சி நடத்தினர். முடிவாக, அங்கு இருக்கும் ஏதேனும் ஒரு மொழியை எடுத்து அதனை செம்மைப்படுத்தி காலத்துக்கு ஏற்றது போல் மாற்றி பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்படியானால் அங்கு அதிக மக்கள் பேசும் ஜாவா மொழியை தானே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் 5 சதவீதத்திற்கும் குறைவாக மக்கள் பேசும் மலயா மொழியை எடுத்துக்கொண்டு அதனை செம்மைப்படுத்தி பாஷா இந்தோனேசியா எனும் புதிய மொழியை உருவாக்கினர். [ குறிப்பு: இருந்தாலும் ஜாவா எனும் பெயர் உங்கள் உலகளவில் மிகவும் பரவலாக தான் இருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? இன்று உங்கள் உலகை ஆளும் கணிப்பொறியில் ஜாவா மொழி என்பது முதன்மை மொழியாக திகழ்கிறது. :)]

மலயா மொழியை அவர்கள் முதன்மையாக எடுத்துக் கொண்டதற்கு சில காரணங்கள் உள்ளது. ஏனென்றால் அந்த மொழியில் ஒருமை பண்மை என்ற வித்தியாசம் வார்த்தைகளுக்குள் கிடையாது (எ.கா: தமிழில் ஒரு பழம் பல பழங்கள், இந்தோனேஷியாவில் ஒரு பழம் பல பழம் மட்டுமே). நிகழ்காலம், எதிர் காலம், கடந்த காலம் போன்றவற்றை குறிப்பதற்காக வினைச்சொற்களின் (Verb Conjugation) ஏற்படும் மாற்றம் இந்த மொழியில் கிடையாது. (எ.கா: தமிழில் நான் பேசுகிறேன் பேசினேன் பேசுவேன், இந்தோனேஷியாவில் நான் இன்று பேசினேன் நாளை பேசினேன் இப்பொழுது பேசினேன் மட்டுமே). இந்த மொழியை படிப்பறிவு இல்லாதவர்கள் கூட 24 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளமுடியும் விதமாக பல்வேறு விதமான மாற்றங்களை செய்து மிகவும் எளிமையாக அதே சமயத்தில் அனைத்து கலைச்சொற்களையும் உள்ளடக்கி இந்த மொழியை அறிஞர்கள் உருவாக்கினார்கள்.

இந்தோனேசிய மொழியை உருவாக்கிய ஒரு சில வருடங்களிலேயே இந்த 14 ஆயிரம் தீவுகளிலும் மக்கள் அதனை முதன்மையான அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்டு ஆங்கிலம் டச்சு போன்ற எந்த ஒரு பிறநாட்டு மொழியையும் பயன்படுத்தாமல் இன்றளவும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டு வருகின்றனர். இந்த வெற்றிக்கு இரண்டு காரணங்கள் உள்ளது. 1. எளிமை 2. தொடர் ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்படும் கலைச்சொற்கள்.

மொழி உருவாக பல்லாயிரம் வருடம் ஆகும் எனும் கணக்கை தகர்த்து சில வருடங்களிலேயே மொழியை செயற்கையாகவும் வளர்க்க முடியும் என்று இந்தோனேஷிய மொழியால் நீங்கள் நிரூபித்து உள்ளீர்கள்.

வார்த்தைகள் அற்ற மொழி

மொழியில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் வீச்சு மாற்றத்தால் (Amplitude variation) உண்டாவது என்று சொன்னேன் அல்லவா? அப்படி வீச்சு மாற்றம் இல்லாமல் வெறும் அலைவரிசையை மட்டுமே மாற்றி (Frequency variation) கட்டமைக்கப்பட்ட மொழியும் உண்டு. அதைப் பற்றி அடுத்த பகுதியில் விரிவாக கூறுகிறேன்.

(நான் சுழல்வேன்)

இந்த தொடரின் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

Exit mobile version