மின்கிறுக்கல்

நான்காம் பரிமாணம் – 24

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் அனல் அதிகாரத்தில் வெப்பத்தைப் பற்றிய பல்வேறு விஷயங்களை கூறிக் கொண்டு வருகிறேன். சென்ற பகுதியில் சூரியனின் வெப்பம் பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தேன். சூரியன் மூலமாகத்தான் பூமிக்கு வெப்பம் கிடைக்கிறது என்றால் கூட சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட வெளியில் கடும் குளிர் நிலவுகிறது என்றும் கூறியிருந்தேன். அப்படி இருக்கும் பொழுது பூமி எவ்வாறு சூரியனிலிருந்து வெப்பத்தை பெறுகிறது? அதற்கான பதிலை இங்கே கூறுகிறேன்.

வெப்பமும் ஒளியும்

வெப்பம் மற்றும் ஒளி ஆகிய இரண்டுமே சக்தியின் வெவ்வேறு வடிவங்கள்தான். இவற்றில் ஒன்றை மற்றொன்றாக எளிதாக மாற்ற முடியும். சூரியனில் இருக்கும் அபரிமிதமான வெப்பத்தைக் கடத்தி பூமிக்கு கொண்டு வருவதற்கு ஏதாவது ஒரு வெப்பத்தை கடத்தும் பொருள் இடையில் இருக்க வேண்டும். அது காற்றாக இருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வெறும் வெற்றிடம் தான் இருப்பதால் வெப்பத்தால் அதனை கடந்து வர முடியாது. இதற்கு மாற்றாக இரண்டு வழிகள் உள்ளன. முதலில் சூரியனில் உண்டாகும் சூறாவளிகள், வெப்பப் புயலை உருவாக்கி அதிலிருந்து கிளம்பும் வெப்ப தூசியை அதன் மேற்பரப்பிலிருந்து வெளிப்படும். அந்த தூசி அபரிமிதமான வெப்பத்தை தன்னுள்ளே கொண்டு விண்வெளியில் பறந்து கொண்டே இருக்கும். இது பூமியை வந்தடையும் பொழுது அதன் வெப்பம் பூமியின் மேலும் படரும். ஆனால் இந்த வெப்ப தூசி உங்கள் மேலே விழுந்தால் உங்களை எரித்து சாம்பலாக்கி விடும். பூமியின் வெளிப்புறத்தில் இருக்கும் காந்த அலைகளால் இந்த தூசி முழுவதும் தடைசெய்யப்பட்டு காந்த அலைகள் குறைவாக இருக்கும் வடதுருவம் மற்றும் தென்துருவத்திற்கு திசை திருப்பி விடப்படுகிறது. இந்த தூசி, துருவங்களில் உள்ள காற்று மண்டலத்தை அடையும்பொழுது ஒளியாக மாறி வானத்தில் ஒரு வண்ணச் சிதறலை உருவாகும். இந்த அழகான வண்ணச் சிதறலுக்கு பெயர்தான் அரோரா(Aurora). ஆகவே இந்த வழியில் வரும் வெப்பமானது நேரடியாக உங்களை வந்து அடைவது இல்லை. இரண்டாவதாக, சூரியன் தன்னுடைய வெப்பத்தை ஒளியாக மாற்றி நேரடியாக மொத்த சூரிய குடும்பத்திற்கும் அனுப்புகிறது. ஒளி என்றால் நீங்கள் கண்களால் பார்க்கும் வண்ணங்கள் மட்டுமல்ல. அகச்சிவப்பு, புறஊதா போன்ற பல்வேறு கண்ணுக்குத் தெரியாத வண்ணங்களும் இதில் அடக்கம். இந்த கதிர்களால் விண்வெளியில் காற்று இல்லை என்றாலும் எளிதாக கடந்து வர முடியும். அப்படி வரும் ஒளி, பூமியின் மேற்பரப்பில் உராய்வதால் மீண்டும் வெப்பமாக மாறி உங்களை தாக்குகிறது. முதலில் சூரியனிலிருந்து வரும் வெப்பம் ஒளியாக மாறியது. பின்பு, சூரியனின் ஒளி வெப்பமாக மாறியது. இங்கே வெப்பமும் ஒளியும் எப்படி ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுகிறது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

சூரியனிலிருந்து வெளிப்படும் இந்த வெப்பப் புழுதியில் ஒரு மிகச்சிறிய பகுதி மட்டும் தான் பூமியை வந்தடைகிறது. மீதமுள்ள புழுதி அனைத்தும் சூரிய குடும்பத்தை தாண்டியும் பறக்கும். வெளிப்படும்போது மிகவும் வேகமாக பறந்து கொண்டிருக்கும் இந்த தூசி, தூரம் செல்ல செல்ல வேகம் குறைந்து சூரிய குடும்பத்தை தாண்டியவுடன் ஒரே இடத்தில் குவிந்து நின்று விடும். இந்த இடத்தை ஹீலியோபாஸ் (Heliopause) என்று கூறுகிறீர்கள். இது எப்படி இருக்கும் என்பதை உங்கள் வீட்டிலேயே உங்களால் சுலபமாக செய்து பார்க்க முடியும். நீங்கள் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கும் போது, குழாயை மிகவும் வேகமாக திறந்து விடுங்கள். அது தரையில் படும் இடத்தில் தண்ணீர் மிகவும் வேகமாக நகர்ந்து விடும். ஆனால், அது விழும் இடத்தை சுற்றி ஒரு வட்டமான தண்ணீர் வளையம் ஒன்று உண்டாகும். அந்தத் தண்ணீர் வளையத்தில் தண்ணீர் அதிகம் நகராமல் இருக்கும். சூரிய குடும்பத்தில் நடக்கும் வெப்பப்புயலும் கிட்டத்தட்ட இதே போல்தான்.  சூரியனில் உருவானால் கூட சூரிய குடும்பத்தை விட்டு வெளியில் போய் தான் இது தங்கும். இதில் உள்ள விந்தை என்ன தெரியுமா? சூரியனின் மேற்பரப்பில் வெறும் 5000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தான் இருக்கும். ஆனால் இந்த ஹீலியோபாசின் வெப்பம் என்ன தெரியுமா? 31000 டிகிரி செல்சியஸ்! ஆம். அது உருவாகும் இடத்தை விட தங்குமிடத்தில் தான் அதிக வெப்பத்தை தருகிறது. இது சூரிய குடும்பத்திற்கு உள்ளேயே தங்கி விட்டால் மனிதன் உட்பட எந்த ஜீவராசியும் சூரிய குடும்பத்தில் எந்த ஒரு கிரகத்திலும் வசிக்க முடியாது. 

வெப்பமும் ஒளியும் தொடர்ந்து உருமாறுவதால் இவை இரண்டுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது என்று நீங்கள் புரிந்து கொண்டு உருவாக்கிய விஞ்ஞானத்தின் பெயர்தான் மீவெப்பவியல் (Pyrometry). இதன் அடிப்படை மிகவும் எளிமையானது. ஒரு பொருள் அதிகமான இந்த வெப்பத்தை வெளிப்படுத்தினால் அதிலிருந்து வெளிப்படும் ஒளியும் மிகவும் அதிகமாக இருக்கும். ஆகவே அதன் ஒளியைக் அளவிடுவதன் மூலமாக அதன் வெப்பத்தையும் துல்லியமாக கணிக்க முடியும். இந்தக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்துத்தான் சூரியனின் மேற்பரப்பில் 5000 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள். சூரியனின் வெப்பம் மட்டுமல்ல. நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் தொடுதல் அற்ற வெப்பமானி (Contactless Thermometer) கூட இதே கோட்பாட்டின் அடிப்படையில் தான் வேலை செய்கிறது. உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடல் வெப்பம் அதிகமாகி அதோடு சேர்த்து உடலிலிருந்து வெளிப்படும் அகச்சிவப்பு கதிர்கள் அதிகமாகும். இந்த அகச்சிவப்பு கதிர்களை அளந்தாலே உங்கள் உடலில் எவ்வளவு வெப்பம் இருக்கும் என்பதை துல்லியமாக கணக்கிட முடியும். நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் குண்டு பல்பு, (Tungsten Filament Lamp) உங்கள் அறைக்கு சூரிய ஒளியில் கிடைக்கும் அதே வெளிச்சத்தை கொடுக்கும் பொழுது சூரியனின் மேற்பரப்பிலும் விளக்கில் உள்ள tungsten கம்பியிலும் ஒரே வெப்பம் தான் இருக்கும். இப்படி வெளிச்சமும் வெப்பமும் ஒரே அளவில் வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்தி குறைந்த அளவு வெப்பத்தையும் அதிக அளவு வெளிச்சத்தையும் கொடுக்கும் பொருளை நீங்கள் உருவாக்கியதன் விளைவு தான் எல்இடி விளக்கு (LED bulb). இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவருக்கு உங்கள் உலகின் அதிகபட்ச கௌரவங்கள்(நோபல் பரிசு உட்பட) பலவற்றை நீங்கள் வாரி வழங்கினீர்கள். ஒளிக்கும் வெப்பத்திற்கும் உள்ள தொடர்பு உங்கள் வாழ்விற்கு அந்த அளவுக்கு மிகவும் அத்தியாவசியமானது. இதனை உணர்ந்து கொண்டாலே எந்த ஒரு சக்தியையும் எவ்வாறு உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் எளிமையாக புரிந்து கொண்டு விடுவீர்கள்.

வெப்பத்தினால் உங்கள் உலகத்தை இந்த அளவுக்கு மாற்ற முடியும் என்றால் உங்கள் உடலிலும் மனதளவிலும் கூட வெப்பத்திற்கு ஒரு பெரிய பங்கு இருக்க வேண்டும் அல்லவா? சொல்லப் போனால் உங்கள் உடலின் அடிப்படை ஆதாரமே வெப்பம்தான். அதைப் பற்றி அடுத்த பகுதியில் விரிவாக கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

Exit mobile version