மின்கிறுக்கல்

நான்காம் பரிமாணம் – 16

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். எனது பார்வையில் நான் கண்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து உங்களுக்குக் கூறிக்கொண்டு வருகிறேன். சென்ற பகுதியுடன் உண்டி அதிகாரத்தை முடித்துக்கொண்டு இன்று முதல் ஒளி அதிகாரத்தை துவக்கி இருக்கிறேன். ஒளி என்றால் என்ன? இருளை நீக்கும் எந்த ஒரு சக்தியும் ஒளியாகும். அப்படியானால் வெளிச்சம் மட்டும்தான் ஒளியா? உங்கள் கண்களுக்கு வெளிச்சம் மட்டுமே ஒளியாகத் தோன்றலாம். ஆனால் அதையும் மீறி பல்வேறு விஷயங்கள் இங்கே ஒளிந்துள்ளன. ஒவ்வொன்றாக இந்த அதிகாரத்தில் விளக்கமாகக் கூறப் போகிறேன். பயணத்தை தொடங்கலாமா?

இருளும் ஒளியும்


அண்ட சராசரத்தில் இருக்கும் சக்தியின் ஒரு வடிவம் தான் ஒளி. இந்த சக்தியானது அண்டத்தின் மூலை முடுக்கு எங்கும் நிறைந்துள்ளது. அப்படி என்றால் இருள் என்ற ஒன்று இருக்கவே கூடாது அல்லவா? ஆனால் பல இடங்களில் நீங்கள் இருளை உணர்ந்து வருகிறீர்கள். ஒரு பூட்டிய அறைக்குள் விளக்கை அணைத்தால் கூட உங்களால் இருளை உணர முடியும். இருள் என்பது ஒளி இல்லாத இடம் என்று நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிக் கிடையாது. இருள் இரண்டு வகைப்படும். முதலாவதாக ஒளி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்கும்பொழுது இருள் உண்டாகிறது. இரண்டாவதாக, ஒளியை நீங்கள் உணர முடியவில்லை என்றால் இருள் ஏற்படுகிறது. குழப்பமாக இருந்தால் ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கி விடுகிறேன்.

அண்டத்தில் கருந்துளைகள்(black holes) உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். பார்ப்பதற்கு இருள் மயமாக கருப்பாக இருப்பதால் அதற்கு கருந்துளை என்ற பெயரை வைத்தீர்கள். ஆனால் கருந்துளை என்பது சக்தியற்ற ஒரு இடம் கிடையாது. சூரியனை விட பல்லாயிரம் மடங்கு சக்தி மற்றும் வெப்பம் கருந்துளைக்குள் உள்ளது. இருந்தாலும் ஏன் இருள் மயமாக உள்ளது? ஏனென்றால் அது வெளிப்படுத்தும் ஒளியானது உங்கள் கண்களுக்கு வந்து அடைய முடியாதது போன்று கருந்துளையில் ஒரு விசித்திரமான நிலைமை உள்ளது. அபரிமிதமான ஈர்ப்பு விசையால் கருந்துளையில் இருந்து வெளிப்படும் ஒளி கூட வெளியே செல்ல முடியாமல் அதன் உள்ளே விழுந்து விடும். இதனால் பார்ப்பதற்கு கருமையாக தெரியும். தமிழ் மொழியில் இந்த குணத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கருமி என்னும் வார்த்தை உருவானது. அளவுக்கு அதிகமாக செல்வம் இருந்தால்கூட அதை தன்னிடம் இருந்து வெளியேற்ற விடாமல் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டிருந்தால் அவன் கருமி ஆகிறான்!  இதுதான் நான் கூறிய முதல் வகையான இருள்.

இரண்டாவது இருள் மிகவும் எளிமையானது. ஜன்னல் இல்லாத ஒரு அறையை முழுவதுமாக நீங்கள் பூட்டிவிட்டால் ஏற்படும் இருளை நீங்கள் அனுபவித்து இருப்பீர்கள். ஆனால் அங்கு ஒளியே இல்லை என்று கூறமுடியாது. உங்கள் பார்வைக்கு எதுவுமே தெரியவில்லை என்றால் கூட பல்வேறு மிருகங்களால் அந்த அறையின் இருளில் பார்க்கும் சக்தி உண்டு. ஒரு அகச்சிவப்பு கேமராவால் (Infra red camera) கூட அந்த இருள் நிறைந்த அறையில் தெளிவாக அனைத்து பொருட்களையும் பார்க்க முடியும். உங்களால் பார்க்க முடியாத காரணம் என்னவென்றால் உங்கள் கண்களுக்கு குறிப்பிட்ட ஒளியை மட்டுமே உணர முடியும். எவ்வளவு வெளிச்சம் இருந்தாலும் பார்வையற்றவரால் எதையும் பார்க்க முடியாது அல்லவா? இதுதான் நான் கூறிய இரண்டாவது வகை இருள்.

இருள் என்ன என்பதை தெரிந்து கொண்டு விட்டீர்கள். இதிலிருந்தே நம் ஒளியைப் பற்றி தெரிந்து கொள்வோம். அண்டத்தில் உள்ள அனைத்து சக்தியையும் உங்கள் கண்களால் உணர முடியாது என்பதால் அவை அனைத்தையும் இருள் என்று கூறிவிட்டு உங்களால் உணர முடிந்த அனைத்து சக்தியையும் ஒளி என்று கூறுகிறீர்கள். ஒளியை உங்கள் கண்களால் மட்டும்தான் உணர வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. உங்களால் பயன்படுத்த முடிந்த எந்த புலத்தின் உதவியாலும் ஒளியை உணர முடியும். அவை அனைத்தையும் இங்கே பார்க்கும் முன் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய கண்களைப் பற்றி இங்கு முதலில் பார்த்துவிடுவோம்.

ஒளி ஒரு சக்தி வடிவம் என்பதால் ஒலியைப் போல ஒரு அலை வடிவமாகவே உங்களுக்கு தென்படும். கடல் அலையை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். தண்ணீர் அமைதியாக இருக்கும்போது அலை ஏற்படுவதில்லை. ஆனால் தண்ணீரில் ஒரு உந்து சக்தி ஏற்படும்பொழுது மேற்பரப்பில் மேலும் கீழுமாக அலை உருவாகிறது அல்லவா? தண்ணீர் மேற்பரப்பில் ஏற்படும் அலை போலவே காற்றிலும் வான்வெளியில் ஏற்படும் அலையை உணர்வதுதான் நீங்கள் பார்க்கும் அனைத்து காட்சிகளாக மாறுகிறது. உங்கள் கண்களால் பார்க்கும் மனிதர்கள், மிருகங்கள், இயற்கை, காட்சிகள், வண்ணங்கள் அனைத்துமே கண்கள் உணரும் ஒருவித அலைதான். மேடு பள்ளமாக உருவாகும் இந்த அலையில் ஒரு மேட்டுக்கும் அடுத்த மேட்டுக்கும் உள்ள இடைவெளி தூரத்தை தான் அலைநீளம் என்று கூறுகிறீர்கள்.

மனிதனின் கண்களால் அனைத்து அலையையும் பார்க்க முடியாது. சுமார் 400 நேனோ மீட்டர் முதல் 720 நானோமீட்டர் வரை உள்ள அலைநீளம் மட்டும் தான் கண்களால் பார்க்க முடியும். 400 நேனோ மீட்டர் கொண்ட அலை ஊதா நிறம் என்றும்  720 நானோமீட்டர் கொண்ட அலை சிவப்பு நிறம் என்றும் அழைக்கப்படுகிறது. அலை வேற்றுமை தான் அனைத்து வண்ணங்களையும் உருவாக்குகிறது. 400-720 வரை உள்ள அனைத்து அலைகளையும் சமமாக கலந்து வெளியிட்டால் அது தான் வெள்ளை நிறம். இந்த அலைவரிசை எதையுமே வெளியிடாமல் இருந்தால் அதுதான் கருமை நிறம். இந்த வண்ணங்களுக்குள் பல்வேறு இயற்கையின் ரகசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன். காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

Exit mobile version