மின்கிறுக்கல்

தில்லிச் சிறுகதைகள்

தில்லிச் சிறுகதைகள்
தொகுப்பாசிரியர் – ச.சீனிவாசன்
வெளியீடு – காவ்யா

முனைவர் ச.சீனிவாசன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிபுரிகிறார். டெல்லி நகரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளை இந்நூலில் அவர் தொகுத்திருக்கிறார். டெல்லியையே வாழ்விடமாகக் கொண்டவர்கள், சில வருடங்கள் மட்டும் வேலையின் பொருட்டு அங்கு தங்கியிருந்தவர்கள் என இருபத்தியாறு கதையாசிரியர்களின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. அவற்றுள் அசோகமித்திரன், அம்பை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, சு.சமுத்திரம், சாருநிவேதிதா, சுஜாதா, பூர்ணம் விசுவநாதன், தி.ஜானகிராமன் ஆகியோரின் படைப்புகளும் அடங்கும். எழுத்தாளர்கள் குறித்த தகவல்களைப் பின்னிணைப்பாகக் கொடுத்திருப்பது சிறப்பு. அனைத்துக் கதைகளும் டெல்லியைக் களமாகக் கொண்டவை. அந்நகரத்தில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பல கோணங்களில் சித்தரிப்பவை.

வட்டாரம் சார்ந்த கதைகள் என்றுமே ஒருவித மன நெருக்கத்தை வாசகரோடு ஏற்படுத்தக் கூடியவை. அந்த நிலத்திற்கும் வாசகனுக்கும் எந்தவொரு தொடர்பும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ரஷ்ய கதைகள் படித்த பலர் மெச்சுவது நேரில் காணாமலேயே அந்நிலைத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதைப் பற்றித்தான். அந்த வகையில் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அனைத்துக் கதைகளிலும் டெல்லி நகரமும் ஒரு கதாபாத்திரமாகக் கூடவே வருகிறது. கனாட் பிளேஸ்,பாலிகா பசார், கரோல் பாக், சாந்தினி சௌக் போன்ற சில இடங்கள் தொகுப்பைப் படித்து முடிக்கையில் நமக்கு மிகவும் பரிட்சயமான இடங்களாகிவிடுகின்றன.

ஊரில் இருக்கும் உறவினர்களால் ஏற்படும் அன்புத் (?) தொல்லைகளைப் பேசுகிறது அகஸ்தியனின் ‘சில தபால்களும் பல தொல்லைகளும்’ சிறுகதை. வெளிநாட்டில் வாழும் மனிதர்களுக்கும் இவர் கூறும் அனுபவங்கள் பல இடங்களில் பொருந்தும். நகைச்சுவை கலந்து நல்ல நடையில் எழுதப்பட்ட கதை. ‘அப்பர் பெர்த்’ கதை, மனத்தில் கீழ்மை நிறைந்திருந்தாலும் அப்பர் பெர்த்தில் ஏறியவர்கள் கீழே இறங்க நினைப்பதில்லை என்பதைச் சுட்டுகிறது. நடுத்தர வர்க்கக் குடும்பத் தலைவர், ஒரு கோட்டு வாங்கப் படும் அவதிகளைக் கூறுகிறது ‘கோட்டு’ சிறுகதை.

சாரு நிவேதிதாவின் சிறுகதை, பிரதமர் இந்திராகாந்தி கொலையை அடுத்து அரங்கேறிய கொடூரங்களை அப்பட்டமாகப் படம் பிடிக்கிறது. மனத்தை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

1940களில் டெல்லியில் குடியேறிய ஒரு படைப்பாளியின் சிறுகதையும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சிறுமியாக இருந்தபோது காந்தியுடன் ஏற்பட்ட சந்திப்பினால் தனது வாழ்க்கைப் பயணமே மாறிப் போன ஒரு பெண்ணின் கதை அது. சீனிவாசனுக்கு இப்பணியில் பெரிதும் உதவிய தில்லித் தமிழ்ச் சங்க நூலகர் திருமதி.ஷமீமின் லவ் பேர்ட்சும் ஒரு கதையின் கருப்பொருளாகியிருப்பது சுவையான விஷயம்.

முன்னுரையில் தனது டெல்லி வாழ்க்கை தந்த அனுபவங்கள் குறித்து சீனிவாசன் தந்திருக்கும் மனப்பகிர்வுகளே பல சிறுகதைகளுக்கு நல்ல கருப்பொருளாக அமையக் கூடியவை. அவை 20 பக்கங்களுக்கு நீண்டிருந்தாலும் படிக்க சுவாரஸ்யமானவை.
ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டு தனித்து நிற்கின்றன. படித்து முடித்தபின் இக்கதைகளை எழுதிய எழுத்தாளர்களின் பிற படைப்புகளையும் தேடிப் படிக்கத் தூண்டுவதோடு டெல்லியை ஒருமுறையாவது பார்த்துவிடும் ஆவலையும் உண்டாக்கிவிடுகிறது தொகுப்பு.

-இந்துமதி மனோகரன்

Exit mobile version