மின்கிறுக்கல்

தனித்த படகு

தனித்த படகு

வெறும் உற்பத்திக் கருவிகளல்ல
காசு பணத்தை தருவிக்கும் பண்டங்களல்ல
ஆணைப் போன்ற ரத்தமும் சதையுமான சக ஜீவி பெண்
குனிஞ்சு வளஞ்சு
நெளிஞ்சு குழஞ்சு
என்னடா வாழ்க்கை இது
பூ உதிர்க்கிறது மரம்
தரையெல்லாம் நட்சத்திரங்கள்
நடுவில் நிலவாய் அவள்
தெரிந்தவர் தெரியாதவர்
தெரியாதவர் தெரிந்தவர்
நிர்ணயித்தவர் ஒருவரையும் காணவில்லை
நண்பர்கள் நடு வழியில் கழண்டு கொண்டு கீழே தள்ளிய
பழமையான உந்து வண்டிகள்
தோழர்கள் தோளிருக்க சுளை விழுங்கிகள்
தன்னந் தனியனாய் நடந்து போய்க் கொண்டிருக்கிறேன்

??????????????????????????

முறிவின் சப்த துணுக்கு

கழுதைப்புலிகள் குதறின
குட்டி மான் சிதைந்தது
கொலை செய்வதை நீங்கள் ரசிக்கத் தான் செய்கிறீர்கள்
உடலை துண்டு துண்டாக்கி
சல்லி போட்டாச்சு
ரத்தத்தைத் தாராக ஊற்றி
சாலை ரெடியாச்சு
வாகனங்களில் போகிறவர்களே நீங்கள் செல்லும் சாலை சுகமாயிருக்கிறதா ?
செஞ்ச பாவத்திற்கு தண்டனை பெற விரும்பவில்லை
தப்பிக்கவே யோசிக்கிறான்
90 வயதிலும்
மனதளவில் கூட
அவன் மாறவில்லை.
கூரையைப் பிரித்து தகரம் வேய்ந்தான் ஒருவன்
அவனது அம்மா இறந்து பத்து வருஷமாகியது
கூரைக்குள் கொத்துக் கொத்தாக அம்மாவின் முடிக்கற்றைகள்.
அவளின் சேலையில் ஒரு அழகான காடு
பூஞ்செடிகள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன
மொட்டை மரமொன்றில் ஒற்றைப் பறவை.

??????????????????????????

சுழித்தோடும் நதி

காற்றாலைகளுக்குள் சிக்கிய
சிறு நகரம்
காகிதமாய் படபடக்கிறது
கிழிவதற்குள் ஆலைகளை பிடுங்கி எறியணும்
வெங்காயத்தை உரித்தேன்
கண்கள் கலங்கின
வேறு ஒன்றுமில்லை
பூ உதிர்ந்து கிடந்தது
பார்க்கப் பரிதாபமாக இருந்தது
பூவல்ல செடி
நனைந்த காகிதமாய் வீழ்ந்து கிடந்தேன்
நடுப்பகல் வெயில் சூடேற்றியது
படபடத்தபடி காற்றில் உல்லாசமாய் பறக்கிறேன்.
பழைய புகைப்படத்தில் சிரிக்கிறேன்
புதிய புகைப்படத்திலும் சிரிக்கிறேன்
நேரில் பார்ப்பவர்கள் நான் சோகமாய் இருப்பதாய் சொல்கிறார்கள்
உலகம் அழகாய் இல்லை
உலகம் அன்பாய் இல்லை
உலகம் அழிந்து கொண்டிருக்கிறது
இறந்து கிடப்பது நானல்ல
வீரியமிக்க என் கனவுகள்
ஏதோ நடமாடிக் கொண்டிருக்கிறேன்.

Exit mobile version