மின்கிறுக்கல்

சூர்யப்பாவை – 7

தளிர்நடைக்கும் தளர்நடைக்கும்
இடைப்பட்ட காலத்தில் நாம்
நடந்துகொள்வதில் வகுக்கப்படுகின்றது
அளறுதுறக்கத்தின் எல்லையளவீடு.
மண்ணையளைந்து பிசைந்து
உடைமாளிகை கட்டியபோது மனம்
மகிழ்வெல்லையை எகிறிக் குதித்தது.
உடையாதவுருவாய் வீடிருக்கையில்
உடைமனம் நமக்கானதாய் மாறியது.

பரபரப்பும் கருத்தூன்றலும்
களித்திருத்தலும் தளிர்நடைக்கானவை.
பதற்றமும் கவலுறுதலும்
தடுமாற்றமும் தளர்நடைக்கானவை.
பரபரப்புக்கும் பதற்றத்துக்கும்
நடுவினின்று சமன்செய்திட
பொறுமைக்குளிகை போதும்.
கண்ணெதிரே பொறுமைக்குளிகை
மண்தரையாய் விரிந்திருந்தும்
கையாளப் பொறுமையில்லை பலர்க்கும்..

உள்ளும்புறமும் உற்றுநோக்க
உலகியலின் சுழற்சி புலப்படும்
அலட்டலில்லா அமைதியைக் கடைந்து
ஆழ்மனத்தில் ஞானம் திரளச்செய்கிறாய்.
காதலெனும் மாமலையில் வழிநெடுக
ஞானவிளக்கேற்றி வழிகாட்டும்
விடிவெள்ளி நீதான் சூர்யா.
உன்னால் ஞானமானது காதல்.!

Exit mobile version