மின்கிறுக்கல்

சூர்யப்பாவை – 6

இறுதிவரி கிடைக்காததொரு
கவிதையைப்போலவே
நிறைவுறாப்பின்னமாய்
நிலைதடுமாறுகின்றது கனவு.
இப்படித்தான் கனவு வரவேண்டும்
என்றெல்லாம் எண்ணுவதில்லை
எக்கனவாயினும் அதில் நீயிருக்கவே
விழைகின்றது ஆழ்மனம்.
அன்றாடம் என் கனவுக்குடிலுக்குள்
அடியெடுத்து வைக்கக்கூடாதா?

நிறைநெல் நாழியைப்போல்
வேட்கை நாழியொன்றை
இமைவாசலில் வைத்திருக்கின்றேன்.
உன் தாள்பட்டு அது
இடறப்படும்போதெல்லாம்
எண்ணற்ற இறும்பூது மணிகள்
எனக்குள் சிதறிச் சிலிர்க்கின்றன.  
ஒற்றை மணிக்குள்ளேயே
ஆயிரம் பட்டாம்பூச்சிகளின்
படபடப்பும் மகிழ்வும்
உள்ளடங்கியிருக்கிறதெனில்
உள்ளப் பரவசத்தின் அளவறிய
உன்னிடமே விட்டுவிடுகிறேன்.

கனவென்பது கண்கட்டு
வித்தையல்ல சூர்யா..
காதற்கட்டு வித்தையது. 
நோகாமலும் விலகாமலும்
அவிழாமலும் கட்டப்பவேண்டும்.
காற்றானது உலகைக்
கட்டியிருப்பதைப்போல..
கனவுக்குள் நுழைந்து என்
கவலைகள் அடித்தகற்றும்
மென்காற்று வல்லாளன் நீ சூர்யா.

Exit mobile version