மின்கிறுக்கல்

சூர்யப்பாவை – 3

எதன்மீதாவது யார்மீதாவது
பித்து பிடித்துத்திரிய
வேண்டும் போலிருக்கிறது..
பற்றுநிலை என்பது
எப்போதுமே
பற்றாக்குறையாகவே தெரிகிறது.
பித்துநிலையே முழுமையாய்
நீக்கமற நெஞ்சை நிறைக்கிறது.

தரையை விழுங்கி மேலெழும்பித்
தளும்புகின்ற கடல்போல
ஒரு பித்துநிலை வேண்டும்.
எங்கிருந்து பார்த்தாலும்
எதிரே தெரிகின்ற வானமாய்
என்னோடு அது பயணம்
செய்திட வேண்டும்.

ஆனாலும் ஒரு சின்னஞ்சிறு
சிற்றெறும்புக்குக்
கடலும் வானும் எவ்வளவு
தெரிந்திட முடியும்?
கண்டதுவரையிலும் போதும்தான்.

மனப்பிறழ்வே பித்துநிலை
என்கின்றனர் பிழையாய்.
எத்தனை பிறழ்விலும்
என்னாலுன் அண்மையை
இயல்பாய் உணரமுடியும் சூர்யா.
உன்பொருட்டு எல்லோரிடமும்
சீராய்ப் பழகவும் முடியுமெனில்
ஒருமுகப்படுத்துதல்தானே
பித்துநிலையாய் இருக்க முடியும்.!

ஒற்றைச்சூரியனாய் நின்றியங்கிப்
பலகோடிக் கதிர்களைப் பாய்ச்சவும்
பலகோடி நீர்த்துளிகள் வாங்கி
ஒற்றைக்கடலாய்த் திரளவும்
காதலால்தானே முடியும்?
கடலும் கதிரவனும் கலந்த
காதற்பித்தினைக் கனிவாய்
ஊட்டியவன் உனையன்றி
வேறுயாருளர் சூர்யா…!

Exit mobile version