மின்கிறுக்கல்

சூர்யப்பாவை – 29

இசைக்கருவியின் வகைகளாய்
முத்தங்களையும் வகைவகையாய்
நீ வைத்திருக்கிறாய்.
அன்றாடம் ஏதேனுமோர்
இசைக்கருவியை மீட்டுதலாய்
இதழ்களை மீட்டி
இன்னிசை முத்தங்கள்
பிறப்பிக்கிறாய் ..

அவையாவும் காதலின்
வண்ணங்களை அள்ளிப்பூசிப்
பட்டாம்பூச்சிகளாகி விடுகின்றன.
வீடெங்கும் பட்டாம்பூச்சிகள்.
படபடக்கும் சிறகுகளால்
வருடும்போதெலாம் புதிதாய்
வாசலொன்று திறக்கின்றது
காதலின் வாய்ப்பாட்டுக்கு.

அவ்வப்போது அனைத்துவகை
இசைக்கருவிகளையும்
ஒருங்கிணைத்து மீட்டியோர்
இன்னிசை நிகழ்வினை
அரங்கேற்றி விடுகிறாய்..
அராகமும் தாளமும் பண்ணுமாய்
முத்தங்கள் இசையாகின்றன.
நீண்டதோர் ஆழ்ந்த இதழ்
முத்தத்தின் பேரின்பவாசலில்
கைகட்டி நிற்கத்தான் வேண்டும்
கலவிதரும் கழிபேருவகையும்..

கனியிதழ்களும் கைவிரல்களும்
மீட்டுதலில் பெருங்கலைஞர்கள்.
மீட்டாவேளையிலும் பூப்போல்
கையாள்வதில் தேர்ந்தவன் நீ.
நேரத்தைக் கடத்திகடத்தியே
நேயத்தைக் கடத்துகின்ற
காதற்கொள்ளைக்காரன் நீ சூர்யா ..
கொள்தலும் கொள்ளப்படுதலுமாய்
சமன்படட்டும் நம் காதல்.

Exit mobile version