மின்கிறுக்கல்

சூர்யப்பாவை – 2

எல்லோர்க்கும் மேகமாயிருக்கும் நீ
எனக்குமட்டும் மழையாகிறாய்.
மழைபொழியா நாள்களில்
கடலோடு உன்னைப் பார்க்கிறேன்.

உப்புக்காற்றின் மென்தழுவலில்
கரித்துக்கிடக்கிறது காதல்.
உப்பளமாய் உனைத்தாங்கிட
பேராவலுறுகிறேன்.
ஆவியாதலில் தேகம் குளிர்கிறது.
அடுத்தடுத்து மேகமாய்த்
திரண்டெழுகிறது ஏக்கம்.

எல்லா ஏக்கங்களும் தீர்வதில்லை.
தீரா ஏக்கங்கள் மலைமுகடுகள்
தேடித் தஞ்சமடைகின்றன.
தீர்ந்த ஏக்கங்கள் மறுபடியும்
பிறப்பெடுக்கின்றன..
தேடியலைவதிலும்
தேடியடைவதிலும்தாமே
நிறைகின்றது இவ்வாழ்வு.

நீ தேடும்போதெல்லாம்
வானமாகின்றேன் நான்..
அடைதலும் அணைதலும்
பின்னிப்பிணைந்து வானவில்லாய்
வளைகின்ற பொற்கணத்தில்
மழையின் பெருவெடிப்பிற்குத்
தீர்ப்பெழுதப்படுகிறது.
மழையானவன் நீ சூர்யா …!

Exit mobile version