மின்கிறுக்கல்

சூர்யப்பாவை – 19

தூக்கத்தில் இயல்பாய்ப் புரள்கையில்
தேடித்துழாவி நம் கைகளைப்
பிடித்துக்கொண்டு தூங்குகின்ற
பேரன்புக் கைகள்தாம் காதலின்
பேரணைத் தேக்கங்கள்..
கைகள் பிணைகையில்
நிகழ்வது வெறும் தொடுதலல்ல.
நிகழ்காதலின் தொடக்கமது.
நெடுங்காவியக் காதலின்
தொடக்கவுரை அப்பிணைப்பு.

அன்பால் பெண்ணை ஆள்வது
மட்டுமல்ல பேராண்மை
அடிமனத்தினின்று வேராகப்
பெண்ணைத் தாங்குவதும்தான்.
பெண்ணைத் தாங்குகையில்
ஆண்தான் தாங்கப்படுகிறான்
புரிந்தவனே பெண்ணைப்
புதுப்பெயல்போல் கொண்டாடுகிறான்.
பொன்வயலெனக் காதலில்
அன்பினை விளைவிக்கிறான்.

பெண்ணென்ற பேரன்பாழியில்
அலையாய் அடித்திடுதல்
வேண்டும் காதலினை..
இடைவெளி இருந்தாலும்
இருப்பினை உணர்த்திடுதல்
இயம்பிடும் காதலுணர்வை.
உணர்த்துதலே உயிர்களின்
வாழ்வுமுடிச்சு என்கிறாய்.
கைகளைப் பிடித்திழுத்துப்
பிணைத்துக் கொள்கிறேன்.

காதலின் நெடும்பரப்பினையுன்
கைகளைப் பிடித்துக்கொண்டே
கடக்க வேண்டும் …
ஏற்றத்தாழ்வுகளில் நானுன்
நிழலிலும் நிழலாயும்
நடந்திட வேண்டும்..
உன் கைகளுக்குள் எனக்கான
கதகதப்பினைச் சுருட்டி
வைத்திருக்கிறாய் நீ..
உன் உள்ளங்கைகளை முத்தி
உயிர்ப்பேறு அடைகிறேன் சூர்யா.

Exit mobile version