கேப்டன் கோபிநாத் இவருடைய சுயசரிதையைத் தழுவி எடுக்கப்பட்டது தான் சூரரைப் போற்று. கேப்டன் கோபிநாத் ஏர் டெக்கான் நிறுவனர் குறைந்த விலையில் விமானப் பயணச்சீட்டுகளை விற்று சாதனைப் படைத்தவர் என்பதைத் தவிர அவரைப்பற்றி எனக்கு நிறையத் தெரியாது. அவரின் வானமே எல்லை புத்தகத்தையும் நான் படித்ததில்லை. சூரரைப் போற்று படம் பார்த்தேன் அதை ஒட்டி மட்டும் என் விமர்சனத்தை வைத்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஏதோ ஒரு கனவு எரிந்துகொண்டே தானிருக்கும். அவன் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் அந்தக் கனவை நனவாக்கிவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டே தானிருப்பான். பெரும்பாலான சமயங்களில் எரிந்துகொண்டிருக்கும் அந்த கனவில் அவன் எதிர்காலம் பற்றிய பயமும் குடும்பமுமே மண்ணள்ளிப் போட்டுவிடும். இன்னும் சில இளைஞர்கள் எந்தவித பின்புலமோ படைபலமோ பணபலமோ இல்லாமலே அவர்கள் கனவுகளை நனவாக்க ஓடி ஓடி ஓய்ந்து ஒன்றுமில்லாமல் காற்றோடு கரைந்துவிடுகின்றனர். ஆயிரத்தில் இலட்சத்தில் கோடியில் ஒருவன் தான் சாதிக்கிறான். அப்படிச் சாதிக்கும் அந்த ஒருவன் நாமாக இல்லாமல் போனாலும் நம்மவனாக, உங்கள் ஊர்க்காரனாக, தெருக்காரனாக, பக்கத்து வீட்டு மாமா பையனாக, உறவுக்காரனாக, நண்பனாக இருந்தால். நாம் ஒவ்வொருவருக்கும் நாமே வெற்றி பெற்றது போல் ஒரு உணர்வு ஏற்படுமல்லவா? கிட்டத்தட்ட அதே உணர்வை இந்தப்படம் ஏற்படுத்தியுள்ளது தான் இதன் மிகப்பெரிய வெற்றி.
படத்தின் முதல் காட்சி தொடங்கி சூர்யா வரும் ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் அசத்திவிடுகிறார். அவருக்குப் போட்டியாக அபர்ணா பாலமுரளியும் சளைக்காமல் தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது ஒரு காதல் திரைப்படமாக இல்லாத போதிலும் ஒரு கணவன் மனைவியாக இவர்களுக்கு இடையில் இருக்கும் காதல் நம்மை உருக வைத்துவிடுகிறது. விடாப்பிடியாக தன் இலட்சியத்திற்காக ஓடும் கணவன். எவ்வளவு இழந்தாலும் அவன் வெற்றிபெறுவான் என அவன் மீது மனைவி வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை. என இருவரும் ஒரு தன்னம்பிக்கைத் தரும் ஜோடியாகப் படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து நம்மையும் அவர்கள் வாழ்க்கைப் பயணத்திற்குள் இழுத்துக்கொள்கிறார்கள்.
இறுதிச்சுற்றில் எப்படி மாதவனுக்கும் ரித்திகா சிங்கிற்கும் இடையில் மோதலாகவே காதல் வளருமோ அதே போல் தான் இந்தப் படத்திலும். இயக்குநர் சுதா கொங்கர பிரசாத் கதாநாயகிகளின் பாத்திரங்களை அழுத்தமாகவும் கதாநாயகர்களுக்குச் சமமாகவும் வைப்பது சிறப்பு. ஆணாதிக்கம் மண்டிக்கிடக்கும் சினிமா உலகில் இப்படிப்பட்ட இயக்குநர்களால் பெண்களின் திறமைகள் வெளிப்படுவது பாராட்டுக்குரியது.
படம் முழுவதிலும் பார்ப்பவரைக் கண்கலங்க வைக்கும் பல அழுகாட்சிக் காட்சிகளும் உணர்ச்சியூட்டும் காட்சிகளும் வந்துகொண்டே இருக்கின்றன. படத்தோடு படமாக ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் வெகு இயல்பாக எந்த இடைஞ்சலும் செய்யாமல் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி நகைச்சுவைகள் இல்லை. படத்திற்கு அது தேவைப்படவும் இல்லை.
நம்மில் பலருக்கும் தெரிந்த கதை தான். சாமானிய மக்களுக்காக விமானம் விடப் புறப்படும் கதாநாயகன். அவனைப் பின்தொடர்ந்து வரும் பிரச்சனைகளை முறியடித்து எப்படி வெற்றி பெறுகிறான் அவ்வளவு தான் கதை. சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி தொடங்கப் புறப்படுவார் இங்கே விமானம். ஆனால் சிவாஜி முழுக்க முழுக்க மசாலாவாக எடுக்கப்பட்ட படம். இது முக்கால்வாசி மசாலாவாக எடுக்கப்பட்டிருக்கும் படம்.
மதுரை சோழவந்தான் கிராமத்துப் பின்னணியில் வரும் கதாபாத்திரங்களில் அம்மாவாக வரும் ஊர்வசி கதாபாத்திரம் மட்டுமே கொஞ்சம் மனதில் நிற்கிறது. காளி வெங்கட், கருணாஸ், சூர்யாவின் நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா மற்றும் கிருஷ்ண குமாருக்குக் கூட பெரிய வேலையில்லை. படம் முழுவதையும் சூர்யாவும் அபர்ணா பாலமுரளியுமே நகர்த்திச் செல்கின்றனர்.
என்னதான் படத்தின் மையக்களம் கிராமமாக இல்லாமல் இருந்தாலும். கிராமம் என்று காண்பிக்கும் காட்சிகளில் கிராமத்தின் வாசம் அந்த அளவிற்கு இல்லை. கூட்டம் கூட்டமாக மக்களைக் காண்பிப்பதாலும் சில தண்டட்டி போட்ட பாட்டிகளைக் காண்பிப்பதாலும் மட்டுமே மதுரை கிராமம் வந்துவிடாது என்பது என் கருத்து.
அதே போல் படத்தில் பல இடங்களில் வரும் ‘த்தா’ போன்ற வார்த்தைகள் மதுரை கிராமங்களில் ஒலிப்பதில்லை. சூர்யாவும் மதுரை வட்டார வழக்கைப் பேசுகிறேன் என்று செல்லும் இடங்களில் எல்லாம் ‘செஞ்சாய்ங்க’ ‘வந்தாய்ங்க’ ‘போனாய்ங்க’ என்றே பேசிக்கொண்டிருக்கிறார். அது மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது.
இப்போதெல்லாம் வரும் படங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை வலுக்கட்டாயமாக வம்பிக்கிழுத்து திட்ட வேண்டும் என்பது கட்டயாமகிவிட்டதோ என்று தோன்றுகிறது. படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் இரயில் பயணக்காட்சியை இப்படித் தான் அமைத்திருக்க வேண்டுமா?
அந்தக் காட்சியில் வருவது போல் மதுரையில் ஒரு ஆண் இரண்டு பெண்களுக்கு நடுவில் வந்து இடித்துக்கொண்டு அமர்வதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை. கிழவியாக இருந்தாலும் குமட்டில் குத்தியிருக்கும். கருவாடும் பக்கத்தில் வந்தால் மணக்கும் பொருள் அல்ல பக்கத்துப் பெட்டிக்கு அந்த நபர் வந்த போதே வாடை வரவேற்றிருக்கும் இந்தப் பக்கமே வந்திருக்கமாட்டார். இந்தக் காட்சிகள் அப்பட்டமாக ஒரு சாதி சார்ந்த வெறுப்பை மட்டுமே பரப்பும். தவிர படத்திற்கு எந்த வகையிலும் உதவவில்லை.
நல்ல படங்களாக வரும் ஒவ்வொரு படத்திலும் இப்படி ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை ஒட்டுமொத்தமாக வில்லன்கள் போலவும் மற்ற எல்லோருக்கும் எதிரிகள் போலவும் சித்தரித்துக்கொண்டிருப்பதும் ஒரு வகைத் தீண்டாமை தான். வேறு ஏதும் அரசியல் நிர்ப்பந்தமா? இல்லை 3 சதவீதத்தைத் தாக்கி 97 சதவீதத்தின் ஆதரவைச் சம்பாதிக்கும் வியாபார தந்திரமா படம் எடுப்பவர்களுக்குத் தான் வெளிச்சம்.
படத்தில் சில சில குறைகள் இருந்தாலும் சூர்யா மற்றும் அப்பரனா பாலமுரளி நடிப்பில் விறுவிறுப்பு குறையாமல் இறுதிவரை செல்கிறது. படத்தின் பல காட்சிகளில் மெய்சிலிர்த்துவிடுகிறது. வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
சூரர்களாகத் துடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்தப் படம் ஒரு புது உத்வேகத்தைக் கொடுக்கும். சூரரைப் போற்று இன்னும் பல சூரர்களை உருவாக்கக்கூடிய படம். படத்தின் மையக் கருத்தையும் அது எடுக்கப்பட்டதன் நோக்கத்தையும் போற்றுவோம்.