மின்கிறுக்கல்

சித்திரை நிலவு

வருடம் முழுவதும்
ஆதவனின் அன்பு சூழ்ந்திருந்தாலும்
சித்திரையில் தெறிக்கும் அக்கினி வெயிலில்
நித்திரையின்றித் தவிக்கிறேன்.
என்னவனின் நினைவு பிம்பம்
சித்திரை நிலவின் ஒளியில் மிளிர்கிறது!

அலமாரிக் கடலில்
அடுக்கப்பட்ட சட்டைகளில்
உன் வாசனை அலைகளைத்
தேடித் தோற்கிறேன்.
நீயோ நடுக் கடலில் நங்கூரமிட்டு
நகரமுடியாத கப்பலாய்த்
தத்தளிக்கிறாய் அயல் நாட்டிலே!

காதல் கடலில் மிதப்பவளின் மேனியெங்கும்,
உன் நினைவு மீன்கள்
மூச்சுமுட்டித் திண்டாடச் செய்கின்றன!

சித்திரைக் கடலில் மிதக்கும்
பௌர்ணமி நிலவு ஒரு தோழியாகி
என்னுள் ஊரும் ஏக்க நண்டுகளை
பிடித்துச் செல்கிறாள்.
காத்திரு கண்ணாளனே…
அந்நண்டுகள் மிக விரைவில்
உன் மேனியைத் தீண்டும்.
அப்படியே தூது வந்தவளை
அங்கேயே தூங்கவிடு.
அவள் இளைப்பாறும் நாழிகையில்
எனக்கான சில முத்தங்களை எடுத்து வரக்கூடும்!!

Exit mobile version