ஆசிரியர்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
தமிழில்: கே.வி.ஷைலஜா
பக்கம்: 184
விலை:ரூ.150/-
பதிப்பகம்: வம்சி பதிப்பகம்
கேரள நவீன கவிதை என்று மலையாள இலக்கிய உலகில் பாசத்தோடு அழைக்கப்படுபவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. 1957இல் எர்ணாகுளம் மாவட்டத்தில் பரவூரில் பிறந்தவர். ‘பதினெட்டு கவிதைகள்’, ‘அமாவாசி’, ‘கஸல்’, ‘ட்ராகுலா’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. ஆயினும் ‘சிதம்பர ஸ்மரண’ என்ற இந்தக் கட்டுரைத் தொகுப்பு இன்னும் அதிக வாசகர்களின் கவனத்தை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது..
பவா மற்றும் சைலஜா அவர்கள் இந்த நூலில் உள்ள பாலச்சந்திரன் சுள்ளிகாடின் சில அனுபவங்கள் குறித்துப் பேசியதை கேட்டதில் இருந்தே இந்நூலின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. சமீபத்தில் இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். புத்தகத்தை ஆழ்ந்து நிதானமாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அடுத்தடுத்த அத்யாயங்களில் இன்னும் என்ன வகையான அனுபவங்கள் காத்திருக்கின்றன என்ற ஆவல் ஒவ்வொரு பக்கத்தையும் வேகமாகப் புரட்ட வைத்து விட்டது. ஒரே நாளில் முழுப் புத்தகத்தையும் முடித்து விட்டேன். ஆனால் அடுத்தடுத்த வாசிப்பின் போது நம் மனநிலையைப் பொறுத்து புதிய கதவுகளைத் திறந்து விடும் சாத்தியங்கள் இந்தப் புத்தகத்திற்கு உண்டு.
இங்கே பாலச்சந்திரன் ஒவ்வொரு சம்பவத்தையும் சிறுகதைக்குரிய அத்தனை கூறுகளோடும் அழகாகத் தந்துள்ளார். சமயங்களில் அதுவே அவற்றின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியை மனத்தில் எழுப்பிவிடுகிறது. ஒரு மனிதனின் வாழ்வில் இத்தனை வேறுபட்ட அனுபவங்கள் சாத்தியம்தானா? என்று திகைக்க வைக்கிறது. நோபல் அகடமி அரங்கில் இந்திய எழுத்தாளர்களின் ஒரு பிரதிநிதியாய் கலந்துகொண்டவரும், ஒரு முதிர்ந்த வேசிக்குத் துணையாக இரவு முழுக்க கடலோரத்தில் கழித்தவரும் ஒருவர்தான் என்பது நம்பவதற்குச் சிரமமாகத் தான் உள்ளது.
வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது கொள்கைப் பிடிப்பினால் சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய பாலச்சந்திரன், கல்லூரி படிக்கும் போதே திருமணமும் செய்து கொள்கிறார். அவரது கவிதைகள் பலரைச் சென்றடைந்திருந்தாலும் வயிற்றுப்பாட்டிற்கு மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். வறுமை அவர் வாழ்க்கையில் சற்று அதிகமாகவே விளையாடியுள்ளது.
ஒரு வேளை உணவிற்காக பிச்சைக்காரனாக அலைந்ததையும், முதலில் உருவான மனைவியின் கருவைக் கலைத்ததையும், ஊறுகாய் விற்க வந்த பெண்ணிடம் கொண்ட சபலத்தையும், மனநலம் பாதித்த நண்பனை நிர்தாட்சண்யமாக விட்டுவிட்டு பஸ் ஏறியதையும் எழுத ஒரு அசாதாரண துணிச்சல் வேண்டும். அது பாலச்சந்திரனிடம் கொட்டிக் கிடக்கிறது. வாசித்து முடிக்கையில், நமது பலவீனங்களையும் ஒருமுறை நம்மைச் சீர்தூக்கிப் பார்க்கச் செய்கிறது. இந்தப் புத்தகம் படிக்கும் அனைவரையும் கட்டிப் போடுவது முகத்தில் அறையும் அதன் உண்மைத்தன்மை தான்.
எழுதியிருப்பவர் ஒரு மாபெரும் கவிஞர் என்பதாலேயே வரிகளில் கவித்துவத்திற்கு பஞ்சமில்லை. ஒரு மனிதரைப் பார்க்கையில் பாலச்சந்திரனின் கண்கள் அவரை ஊடுருவி அகவுலகின் ஆழங்களைத் தொட்டுவிடுகிறது. உதாரணத்திற்கு, கமலா தாஸைப் பற்றிய அத்தியாயத்தில்,
//’மாதவிக்குட்டி அகங்காரியான ஒரு ராஜகுமாரி’ என்று நான் என் குழந்தைப் பருவத்தில் நினைத்தேன். வசீகர அழகுடையவனான ஏதோ ஒரு ராஜகுமாரனால் வஞ்சிக்கப்பட்டவளாய்த்தான் அவளின் தோற்றம் எனக்குள் இருந்தது.//
என்று குறிப்பிடுகிறார். கமலா தாஸின் ‘என் கதை’ படித்த போது அவரது வார்த்தைகள் எத்தனை பொருத்தமானவை என்று தோன்றியது.
தான் சிறுவயதில் ரசிகனாகப் பார்த்து வியந்த சிவாஜி கணேசன் தன் முன்னால் வீரபாண்டிய கட்டபொம்மனாக மாறி வசனம் பேசுவதைக் கேட்டு சிலிர்த்த தருணத்தையும் சுவையாகப் பதிவு செய்துள்ளார்.
இந்தப் புத்தகம் பற்றிய எந்தப் பதிவும் அதனைத் திறன்பட மொழிபெயர்த்துள்ள கே.வி.ஷைலஜாவின் கைவண்ணத்தைப் பற்றிக் கூறாமல் நிறைவடையாது. ஒரு மொழிபெயர்ப்பு படைப்பை வாசிக்கிறோம் என்ற உணர்வு எந்த இடத்திலும் தோன்றாதவாறு அத்தனை நேர்த்தி. ஒரு சிறு பத்திரிகையில் பாலச்சந்திரனின் சிவாஜி கணேசன் உடனான அனுபவத்தை வாசித்து அதனால் கவரப்பட்டவர், பின்னர் தாய்மொழியானாலும் வாசிக்க எழுதத் தெரியாத மலையாளத்தை ஏழாவது படிக்கும் தனது அக்கா மகளிடமிருந்து கற்று இந்த நூலை மொழிபெயர்த்திருக்கிறார். அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் பாரட்டுதலுக்குரியவை. இந்த நூல் அதிகம் பேரைச் சென்றடைந்ததற்கு அவரது சீரிய மொழிபெயர்ப்பும் ஒரு முக்கிய காரணம்.
சில புத்தகங்கள் வாழ்க்கையைப் பற்றிய நமது பார்வையையே மாற்றிப் போட்டுவிடுக் கூடியவை. ‘சிதம்பர நினைவுகள்’ நூலும் அந்த வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. ஒரு ஆகச் சிறந்த கவிஞனின் கலப்படமில்லா உண்மைக் குறிப்புகளை வாசித்து மனம் நெகிழ நூலைக் அவசியம் படியுங்கள்.
இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சுட்டவும்.?