மின்கிறுக்கல்

சம்ஸ்காரா

கன்னட மூலம்: யு. ஆர்.அனந்தமூர்த்தி
தமிழில்: டி.எஸ்.சதாசிவம்
வெளியீடு: அடையாளம் பதிப்பகம்

1932ம் ஆண்டு கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள மேலிகே கிராமத்தில் பிறந்தவர் உடுப்பி ராஜகோபாலாச்சார்ய அனந்தமூர்த்தி. ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு ஆய்வுப் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். அங்கே அவர் மாறி வரும் இந்திய கலாசாரத்தைப் பற்றி எழுதிய நாவல் தான் ‘சம்ஸ்காரா’. 1965ல் இந்த நாவல் வெளிவந்த போது கன்னட இலக்கிய உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டாபி ராம ரெட்டி இயக்க, திரைக்கதையை கிரீஷ் கர்னாடும், அனந்தமூர்த்தியும் அமைக்க 1972ல் திரைப்படமாக எடுக்கப்பட்டு பல சர்வதேச விருதுகளைப் பெற்றது.

பிராணேஸாசார்யார் ஆச்சாரம் அனுஷ்டானங்களை அனுதினமும் கடைபிடிப்பவர். ஆனால் அவரின் சொற்பொழிவு கேட்டு வளரும் நாரணப்பா, மரபிலிருந்து முற்றிலும் வேறான வாழ்க்கையை வாழ்கிறான். இந்த இருவேறு கதாபாத்திரங்களின் உள்ளாக சென்று மரபார்ந்த விஷயங்கள் குறித்தான தத்துவப் பார்வையை முன்வைக்கிறது இந்த நாவல்.

அனந்தமூர்த்தி வாழ்ந்த கிராமத்தில் நிலவிய இறுக்கமான வைதிகத்தனம் அவருள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அங்கே நடந்த சில உண்மைச் சம்பவங்கள் அவரை இந்நாவல் எழுதத் தூண்டியுள்ளன.

நாரணப்பாவின் இறப்பிலிருந்து தொடங்குகிறது கதை. பிராமணீயத்தின் எந்த விதிகளையும் பின்பற்றாத அவனின் இறுதிச் சடங்குகளை யார் செய்வது என்ற குழப்பம் வருகிறது. முடிவு எடுக்கும் பொறுப்பு அந்தக் கிராமத்தில் இருக்கும் பிராணேஸாசார்யார் மீது விழுகிறது. அவர் அந்தப் பிரச்சனைக்கான தீர்வு தேட முயற்சிக்கையிலேயே அவர் இதுவரை கடைபிடித்து வந்த ஆசாரங்களுக்கு சோதனை வருகிறது. மரபின் சடங்குகளுக்குள் தன்னை புதைத்து வாழ்ந்த அவருக்கு இருத்தலியல் பற்றிய எண்ணங்கள் மேலோங்குகின்றன. அதன் பின் அவருக்குள் நிகழும் அகவுலக அலைகழிப்புகளை நாவல் விரிவாக கூறுகிறது.

‘கலாச்சாரம்’, ‘சவ அடக்கம்’ ஆகிய இரண்டு அர்த்தங்கள் வரும் ‘சம்ஸ்காரா’ என்ற சொல்லைத் தன் நாவலுக்கு தலைப்பாக அனந்தமூர்த்தி சூட்டியிருப்பதே கதையின் மையத்தை நமக்கு உணர்த்திவிடுகிறது.
மரபிற்கு எதிரான நிலைப்பாட்டை நாவலின் கதைக்களம் கொண்டிருந்தாலும் அது எங்கேயும் மரபைத் தாண்டிச் செல்லவில்லை. மரபான விஷயங்களுக்கு உள்ளாக அமர்ந்து கொண்டே அதற்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்கும் விடை தேட முயற்சித்திருக்கிறார் அனந்தமூர்த்தி.

அதிகமான சம்ஸ்கிருத வார்த்தைகளின் கலப்பால் வாசிப்பதற்கு சற்று கடினமாகவே உள்ளது. ஆனால் மூலத்தில் இந்தக் கலப்பு தான் நாவலின் நுட்பத்தை கூட்டியிருப்பதை டி.ஆர். நாகராஜின் முன்னுரையிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்நாவலின் கலைத்தன்மை குறித்து அனந்தமூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார், “நான் எதார்த்த நாவலாசிரியன் அல்லன். என் படைப்பு குறியீட்டுத் தன்மையில் அமைந்துள்ளது. அங்கு பெண், பெண்ணாகவே வரவேண்டுமென்றில்லை. மரம், வானம், பூ முதலியன இன்னொரு விஷயத்தைத் தொனிக்கும்படி வரலாம், கவிதை வாசிக்க விரும்பாதவன் என் நாவலை வாசிக்க முடியாது.” அவர் சொல்வது போல் நாவலில் வரும் பிராணேஸாசார்யார், நாரணப்பா, சந்திரி என அனைத்துக் கதாப்பாத்திரங்களும் குறியீடுகளே. கதையைத் தாண்டிய ஆழமான தேடலுக்கு அவை வழிவகுக்கின்றன.

கலாசார மரபைக் கேள்வி கேட்கும் நாவலாக இருந்தாலும் படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் அனுபவம் சார்ந்த தரிசனங்களைத் தரக் கூடியது இந்நாவல். அதனாலேயே இந்திய நவீன இலக்கியத்தில் இன்றளவும் முக்கியமான நாவலாகக் கருதப்படுகிறது.

Exit mobile version