மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 37

பருந்துப் பார்வை

சிறகுகளை விரிக்கும் வரை
தெரிவதில்லை எது அற்பமென்று

எரிமலைகூட மத்தாப்பாய் தோன்றும்
எதிரியும்கூட நண்பனாய் தெரிவான்

தூரம் செல்லச் செல்ல
தாண்ட முடியா உயரங்களும்
தூசியாய் தோன்றும்

மேகத்தை தொட்டவனுக்கு
சூரியன் எக்காலத்திலும் மறைவதில்லை

ஆழ்கடலில் மிதப்பவன்
ஆழிப்பேரலைகளுக்கு
அஞ்சுவதில்லை

இலவச மெளனத்தின் இன்பத்தை
நுகரத் தெரியாதவனே
சச்சரவுகளை விலை கொடுத்து
வாங்குகிறான்

இருப்பதோடு சமாதானமாய்
இருக்கத் தெரிந்தவனே
இவ்வுலகை ஆளும் சக்கரவர்த்தி

தன் இருப்பைக் காண
கண்ணாடியை நம்பியவனே
சுக்கல் சுக்கலாக
உடைத்தெறியப்படுகிறான்

எவருக்கோ நடப்பதுபோல்
எட்ட நின்று பார்ப்பவனை
எவற்றால் தான் வெல்ல முடியும் ?

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Exit mobile version