மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 30

சாஸ்வதச் சிரிப்பு

கடற்கரை மணலில்
பதிந்த பாதங்களுக்கு
கணக்கில்லை….

அச்சின் ஆயுளோ
அலையடிக்கும் நேரமே

எத்துணை பதிந்தாலும்
தீர்ந்து போவதில்லை

வீடு கட்டி விளையாடிய
சிறார்களின் கை தடம் முதல்

வீடு திரும்பாமல்
கடலில் மாய்ந்தவர்களின்
காலடிகள் வரை

பெயரெழுதி காத்திருக்கும்
காதலி முதல்

பெயர் மறந்து போகும்
பெரியவர்கள் வரை

யாருக்கும் விதிவிலக்கில்லை
எந்தப் பாதங்களும் இங்கே
எப்போதும் நிலைப்பதில்லை

எவ்வளவு ஆழப் பதிந்தாலும்
சேமித்து வைக்கப்படுவதில்லை
போற்றிக் கொண்டாடப்படுவதில்லை

காலடி பதிப்பது
பெருமை என்றெண்ணும் வரை
காலப் பொதி சுமப்பது
தண்டனையாய்த் தோன்றும்

கட்டப்படும் மணற் கோட்டைகள்
கட்டும் நேர மகிழ்ச்சிக்காகவே

விளையாட்டு முடிந்தபின் இடித்துவிட்டு
சிரித்துக்கொண்டே நகரும்
சிறுவனாய் வாழ்தல் வரம்

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Exit mobile version