மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 24

மூட பிம்பம்

கண்ணாடியில் பிம்பம் ஒன்று
கண் மூடி அமர்ந்திருக்க
காண்பவன் மட்டும் இங்கே
கண்ணுக்குத் தெரிவதில்லை

நிழல் இருக்க நிஜம் எங்கே?
குழல் இல்லாத ஓசை எப்படி?

கேள்விகள் துளைக்க
கண்கள் தானே திறக்க

திகைத்த பிம்பம் தலை சுற்றி
திக்கெங்கும் பார்த்து
தன் நிலை மறந்துபோய்
தன்முனைப்புக் கொண்டதாம்

பிரதிபலிக்கும் பொருளெல்லாம்
பிரதிகளின் பிரதிகளேயன்றி
பிரிதொன்றில்லை என்றுணராமல்

ஒன்றோடு ஒன்று சேந்த்தும்
ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டும்
ஓயாத சலனங்கள்

ஓய்விலா ஆட்டத்தால்
ஓய்ந்துபோக நேரும் வரை
பிரதிபலிப்பவன் யார் என்று
பிரித்தறியத்தான் முடியுமோ?

பிம்பம் தன்னை நிஜமென்று
பிரமை கொண்டு, தனித்தியங்கப்
பலவாறு முயன்றாலும்
பலிக்குமோ அதன் அறியாமை?

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Exit mobile version