மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 23

இருவன்

ஒவ்வொரு மனிதனும்
இருவனாய் இருக்கிறான்

ஒருவன் செய்வதை
மற்றவன் பார்க்கிறான்

மேலே இருப்பவனின்
மேட்டிமைத் தனத்தால்
உள்ளே இருப்பவன்
ஊமையாகிப் போகிறான்

வெளியே தன் அடையாளங்கள்
வெவ்வேறாய் மாறிணும்
மறைந்து நிற்பவன்
மாறாது நிற்கிறான்

ஒன்றாகவே ஒட்டிப் பிறந்தாலும்
ஒருவன் அடையும் மகிழ்சியும் துக்கமும்
ஒருபொழுதும் பாதிப்பதில்லை
ஒரே நிலையில் திளைப்பவனுக்கு

சாட்சியாய் இருப்பவனின்
சக்தியின்று சாத்தியமில்லை
எதுவும் என்றாலும்

சார்ந்து நிற்பவன் தன்
சார்பை மறந்து
சாதனைகளுக்கு
சொந்தம் கொண்டாடுகிறான்

சோதனைகள் வந்தாலும்
சோர்வுற்றுத் தன்னை
கீழாக எண்ணிக்
கதறிச் சாய்கிறான்

மானமும் அவமானமும்
தோல்வியும் வெற்றியும்
ஏற்றமும் இறக்கமுமாய்
எண்ணற்ற இருமைகளில் சிக்கி

காட்டாற்றில் கவிழ்ந்த படகாய்
காற்றில் பறக்கும் தூசியாய்
கட்டுக்கடங்காமல் அலைந்தபின்
கரைசேரத் தவிக்கிறான்

கருணையே வடிவமாய்
காத்திருப்பவன் கை நீட்ட
கண்டுகொள்ளாமல் விடப்பட்டவனின் முன்
கண்ணீரால் தன்னைக் கரைக்கிறான்

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Exit mobile version