மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 17

தொலைந்த சாவிகள்….

தோன்றுவதும் மறைவதும்
இருப்பதும் மாறுவதுமாய்
சுற்றிச் சுழன்றபடி ஒரு
சோர்விலா விளையாட்டு

ஒன்றைப் போல் ஒன்றில்லை – ஆனாலும்
ஒவ்வொன்றும் வேறு வேறுமில்லை

நாடகம் முடிந்தபின்
நாயகனும் நயவஞ்சகனும்
நண்பர்கள்தான் என்றால்
நம்பத்தான் முடியாமோ ?
நடிக்கும் தருணம்

அரிதாரம் கலைந்தபின் – என்றும்
அன்பு மட்டுமே எஞ்சும் – அதன்முன்
அண்டம் பெரிதாகத் தோன்றினும்
அளவிடத் தராசிருப்பின்
அஞ்சித் தயங்கி நிற்கும்
அடிபணிந்து தோல்வி ஏற்கும்

கடல் சேரும் நீரதிலே
குட்டையென்ன குளமென்ன
உடல் பலவாய்த் தோன்றினும்
உய்யும் நிலையில் பகையென்ன?

தேடல் ஒன்றே வழியாம் – உள்ளே
தேர்ந்த ஒளி தோன்றும்
தேன் தேடிப் போகாது
தேனியைத் தேடி என்றும்

நேற்றைய பதில்களுக்கும்
நாளைய கேள்விகளுக்கும் – நடுவே
நில்லாத போக்குவரத்தால்
இல்லாது போன இன்றின்
இருட்டைக் கிழித்துப் பார்ப்பின் – அவ்
இடைவெளியில் சஞ்சலமின்றி
இளைப்பாறுகிறதாம்
இப் பிரபஞ்சத்தின் கொத்துச்சாவி….

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Exit mobile version