மின்கிறுக்கல்

காலங்களில் அவள் வசந்தம் – Modern day மௌன ராகம்

தீபாவளிக்கு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளிவந்த நிலையில் அதற்கு அடுத்த வாரமே சத்தமே இல்லாமல் வெளிவந்திருக்கும் சிறிய பட்ஜெட் படம்தான் “காலங்களில் அவள் வசந்தம்”. தேசிய விருது பெற்ற பாரம் படத்துக்கு வசனம் எழுதிய எழுத்தாளர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் முதல் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் திரையரங்கம் சென்றேன். எனது எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

விமர்சனம்

“காலங்களில் அவள் வசந்தம்” – தமிழ் படங்களில் பாடல்களின் முதல் வரியை படத்தின் தலைப்பாக வைக்கும் பழக்கம் தொன்று தொட்டு நடந்து வருவது தான். இதில் அதிகப்படியான படங்களின் பெயர்கள் சலிப்பூட்டும் விதமாகத்தான் இருக்கும். ஆனால் காலங்களில் அவள் வசந்தம் எனும் பாடலை தமிழ் ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. மிகவும் புகழ் பெற்ற இந்தப் பாடலின் முதல் வரியே இந்த படத்தின் தலைப்பாக வைத்துள்ளார்கள். இந்தப் பாடலின் தனிச்சிறப்பு என்னவென்றால் இதன் ஒவ்வொரு வரியும் தனித்தனியாக கூட கவிதை போன்று இருக்கும். அப்படி 3 சொற்களில் எழுதப்பட்ட சிறிய வகை ஹைக்கூ கவிதை போன்ற இந்த அழகான தலைப்பை படத்துக்கு கொடுத்த இயக்குனர் மொத்த படத்தையும் கவிதை போல செதுக்கியுள்ளார்.

சிறிய பட்ஜெட் படம் என்னும் எண்ணம் சிறிதும் வராத வண்ணம் படத்தின் ஒவ்வொரு காட்சியுமே கலர்ஃபுல்லாக நகர்கிறது. படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் புதுமுகம் என்று தோன்றாத வண்ணம் கைதேர்ந்த திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக ஹரியின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் இனிமையும் இளமையும் ததும்புகிறது. படத்தில் வரும் அனைத்து பாடல்களும் கதைக்கு நடுவே நகர்வதால் நேரம் போவதே தெரியாமல் படத்தின் முதல் பாதி நகர்ந்து விடுகிறது. திருமணத்திற்கு பின்பு வரும் காதல் எனும் வித்தியாசமான கதை களத்தில் சண்டை, குத்துப்பாட்டு போன்ற மாஸ் மசாலா விஷயங்களையும் சேர்த்திருப்பது மௌன ராகத்திற்கு பின்பு இந்தப் படத்தில்தான் இயல்பாக ஒத்துப்போகிறது. 

படத்தில் காதலைப் பற்றிய கவித்துவமான விஷயங்களும், உண்மையான காதலை பற்றிய தத்துவங்களையும் எதார்த்தமான வசனங்களில், 4 காலங்களுக்குள் வரும் நான்கு பாகங்களாக இயக்குனர் கொண்டு வந்துவிடுகிறார். அதற்கு ஒரு சபாஷ். 2K கிட்ஸ் சிலருக்கு இந்த வசனங்கள் சற்று நீளமாக தோன்றினாலும் அவர்களுக்கு பிடிக்கும் வகையில் சற்று நெருக்கமான காதல் காட்சிகளும் படத்தில் வருகிறது. படம் முடியும் பொழுது சினிமாத்தனமான காதலுக்கும் உண்மையான காதலுக்கும் இருக்கும் வித்தியாசத்தை இந்தப்படம் அருமையாக கோடிட்டுக் காட்டுகிறது. படத்தை மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஒரு ஃபீல் குட் மூவியாக இருந்தாலும் அதனடியில் காதலைப் பற்றிய ஆழமான தத்துவம் இருப்பதை உணர முடிகிறது. எடிட்டிங், கேமரா என்று அனைத்துத் தொழில்நுட்பத் துறைகளிலும் இந்த படம் முத்திரை பதிக்கிறது.

படத்தின் தொடக்கம் முதலே கவித்துவமாக சென்றுகொண்டிருக்கும் காட்சிகள், படத்தின் கடைசி இருபது நிமிடங்களில் சற்று கிளிஷே காட்சிகளாக மாறிவிடுவது சிறிய குறை தான். அது மட்டும் இல்லை என்றால் இதனை ஒரு முழு காதல் காவியமாக கொண்டாடியிருக்கலாம். படத்தின் இடையில் தமிழக கர்நாடக மொழி பிரச்சனையை இயக்குனர் எடுத்திருந்தாலும் இறுதியில் அந்த பிரச்சனையை அவரே நிவர்த்தி செய்து விடுகிறார். இருந்தாலும் இதுபோன்ற காட்சிகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் மிகவும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் நாயகனின் அம்மாவாக வரும் பாத்திரம் மட்டும் சற்று செயற்கையாக வசனம் பேசுவது போல் இருந்தது. சரண்யா பொன்வண்ணன் போன்ற இயல்பான அம்மா பாத்திரங்களை தமிழில் தொடர்ச்சியாக பார்த்ததால் நமக்கு ஏற்பட்ட விளைவாக கூட இது இருக்கலாம். 

பல நூறு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் காதல் காவியங்கள் கூட சாதிக்க முடியாத அளவுக்கு மிகவும் சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்களுடன் ஒரு புதுமுக இயக்குனர் தன்னுடைய முதல் படத்தில் சாதித்திருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. இதற்காக இந்த மொத்த படக்குழுவுக்கும் நமது வாழ்த்துக்கள். இது போன்ற புது முயற்சிகளை ஊக்குவிப்பதால் பல இளம் கலைஞர்கள் உருவாகுவார்கள் என்று நாம் நம்பலாம். கண்டிப்பாக திரையரங்குக்கு சென்று ஒரு முறையாவது ரசித்து பார்க்க வேண்டிய படம் இந்தக் “காலங்களில் அவள் வசந்தம்”. 

Exit mobile version