மின்கிறுக்கல்

காற்று வெளியிடை

வந்திருந்த குறுஞ்செய்திக்கு என்ன பதில் அனுப்புவது என்று தெரியாமல் வானில் அலையும் முகிலனங்கள்போல் அவன் மனத்தில் எண்ண அலைகள் அலை பாய்ந்துக்கொண்டிருந்தன. நெடு நேரம் கைத்தொலைபேசியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘ஷுட்டிங்குக்கு நேரமாச்சுன்னு பரபரன்னு கிளம்புன. இப்போ போனையே உத்து பார்த்துக்கிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்க?’ என்று கேட்டபடி வந்தார் அவனின் அம்மா பார்வதம்.

‘ஒண்ணுமில்லம்மா வேலை விஷயமா சின்ன குழப்பம் அதான்’

‘கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கு. இந்தக் குழப்பத்தையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு இனிமேலாவது சந்தோஷமா இருக்கப்பாரு. சொந்தக்காரங்களுக்குக் குடுக்கப் பத்திரிக்கை பத்தலன்னு மாமா இரண்டு நாளா கேட்டுட்டு இருக்குறாரு. இன்னைக்காவது மறந்துடாம பத்திரிக்கைய கொடுத்துட்டு வந்துடு. அப்புறம் என் மருமக வெண்பாகிட்ட…’

‘போதும்மா…. நான் சாயந்தரம் மாமா வீட்டுக்குப் போயிட்டு உங்களுக்குப் போன் பண்ணுறேன். அப்போ உங்க மருமககிட்ட என்ன சொல்லனுமோ சொல்லுங்க. இப்போ எனக்கு நேரமாச்சு‘ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

இன்று அவனுக்குப் பாசிரிஸ்ஸில் 10 மணிக்குச் சூட்டிங். நேரம் பார்த்தான். கடிகாரம் 8.30ஐ காட்டியது. தெம்பனிஸ்லிருந்து பாசிரிஸ்க்கு பத்து நிமிடத்தில் சென்று விடலாம். செல்லும் வழியில் திருமணத்திற்குப் புகைப்படம் எடுப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த கடைக்குச் சென்றுவிட்டு ஷூட்டிங்கிற்குச் செல்லலாம் என்று நேற்று முடிவு செய்திருந்தான். ஆனால் காலையில் குறுஞ்செய்தியைப் பார்த்த பிறகு அவனுடைய மனம் மாறிவிட்டது. அந்த நேரத்தில் அவனுக்கு அமைதியான சூழலும் தனிமையும் தேவைப்பட்டது. வீட்டிலிருந்தால் அம்மா ‘தொண தொண’வென்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். ஆகையால் சட்டென்று வீட்டை விட்டு கிளம்பியவன் எங்கே செல்வது என்று யோசித்தான். அப்போது அவன் கண்ணில் பூங்கா தென்பட அங்கே அமர்ந்துவிட்டுச் செல்லலாம் என்ற எண்ணம் தோன்ற பூங்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அன்று வானம் மப்பும் மந்தாரமாக இருந்ததால் வெக்கை சற்று குறைவாக இருந்தது. வீசிய காற்றில் இருந்த சிலுசிலுப்பு அவனுக்கு இதமாக இருந்ததோடு அலை பாய்ந்த உள்ளத்திற்கு ஒத்தடம் கொடுத்தாற்போல் இருந்தது. ஓரமாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான். பூங்காவின் அமைதியான சூழல் அவன் மனத்துக்குச் சற்று இதமளிக்க தொலைபேசியை எடுத்தான். கிட்டதட்ட ஐம்பது தடவைக்கு மேல் படித்த அந்தக் குறுஞ்செய்தியை மீண்டும் முதல் முறை படிப்பதுபோல் படித்தான்.

“ஹாய் கார்த்திக்! இன்று உங்களுக்கு நேரமிருந்தால் வழக்கமாக நாம் சந்திக்கும் இடத்தில் நேரில் சந்திக்கலாமா?” என்று நந்தினியிடம் வந்திருந்த ஒற்றை வரியை மீண்டும் படித்தபோது ஐஸ்கச்சாங்கில் ஊற்றப்பட்ட வண்ணக்கலவையாய் அவன் மனத்தில் எண்ணங்கள் வண்ணக்குவியலாய் ஊற்றெடுத்தது. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவளிடமிருந்து வந்திருக்கும் முதல் குறுஞ்செய்தி. இதற்குப் பதில் அனுப்புவதா அல்லது வேண்டாமா என்ற குழப்பம் அவன் மனத்தில் ஊஞ்சல்போல் ஊசலாடிக்கொண்டு இருந்தது. அப்போது அவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் இருந்த மரத்தில் அணில் ஒன்று மரத்தில் ஏறுவதும் இவன் அருகில் வருவதுமாக விளையாடிக்கொண்டிருந்தது. அதன் துறுதுறுப்பும் குறும்புத்தனத்தையும் பார்க்கும்போது அவனுக்குள் நந்தினியின் நினைவுகள் கிளர்ந்தன.

அவளும் இப்படித்தான் துறுதுறுவென்று இருப்பாள். எந்த வேலையையும் “பட பட” வென்று செய்து முடித்து விடுவாள். அந்தத் துறுதுறுப்பும் படபடப்பும்தான் அவளை அவன் பால் ஈர்த்தது. அன்பை வெளிப்படுத்துவதில் அவளை மிஞ்ச முடியாது. அவளுடன் இருந்த நாட்களில் அவன் கொண்டாடிய பிறந்தநாட்கள் இன்றும் அவன் மனத்தில் இனிக்கின்றன. அதிரடியாக ஏதாவது செய்து அவனை அசத்தி விடுவாள். எதிலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அவளின் ஒவ்வொரு செயலும் இருந்தது. ஆனால் ஒரு விஷயத்தை வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டால் அதன் பிறகு அவள் மனத்தை மாற்ற முடியாது. ஒரு முறை வேலை பளுவினால் அவளுக்கு உடல் நிலை சரியில்லதபோது மருத்துவர் அவள் காபி குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக்கொண்டால் நல்லது என்று அறிவுரை கூறினார். காபி என்றால் அவளுக்கு உயிர். ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது அருந்துவாள். ஆனால் மருத்துவர் சொன்ன பிறகு அவள் அதை அடியோடு விட்டுவிட்டாள். பின்னாளில் அந்தக் குணம்தான் அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைக்கும் என்பதை அவன் அறியவில்லை.

தேசிய பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கும்போது ‘சங்கே முழங்கு’ நிகழ்வில்தான் அவள் அறிமுகமானாள். தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய மாணவர் மன்றம் நடத்தும் கலை நிகழ்ச்சி அது. ஆடல், பாடல் நாடகம் என்று தமிழில் நடக்கும் அந்த நிகழ்ச்சியை அந்த ஆண்டு அவன் தொகுத்து வழங்கினான். அதைப் பார்த்து வாழ்த்து தெரிவிக்க வந்தபோதுதான் அவர்களுக்குள்ளான நட்பு தொடங்கியது. பின்னர் இருவருக்குள்ளான புரிதல் மெல்ல மெல்ல காதலாக மலர்ந்தது.

அவனுக்குச் சிறு வயதில் இருந்தே தமிழ்மொழி மீது ஆர்வம் அதிகம். பள்ளயில் படிக்கும்போது பல போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்று இருக்கிறான். அதன் பின்னர் மேடை நாடக குழுவில் இணைந்து சில காட்சிகளில் நடித்திருக்கிறான். ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்த பழக்கம் பின்னர் நடிப்பின் மீது தீராத தாகமாக மாறிப்போனது. ஒரு முறை வசந்தம் தொலைக்காட்சியில் ஒரு சிறு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நிகழ்ச்சி மக்களிடையே வெற்றி பெற வாய்ப்புகள் அவனைத் தேடி வந்தன. அப்போது அவனின் பட்டப்படிப்பும் முடிவு பெற்றது. வேலை செய்துகொண்டே வாய்ப்புக் கிடைக்கும்போது நாடகங்களில் நடித்து வந்தான். இந்த நிலையில் அவர்களின் காதல் அவனின் வீட்டிற்குத் தெரிய அவன் அம்மாவோ அதற்குச் சிகப்புக்கொடி காட்டி பிடிவாதமாக இருந்தார். காரணம் அவருடைய அண்ணன் மகளை மருமகளாக்குவது அவர் விருப்பமாக இருந்தது. ஆனால், அவன் விருப்பம் நந்தினியாக இருந்ததால் வீட்டை எதிர்த்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கையானது மலரும் மணமும்போல மணம் வீசத் தொடங்கியது. பகுதி நேரமாகத் தொடங்கிய அவனுடைய நடிப்பு ஆர்வம் வாய்ப்புகள் பெருகியதால் முழு நேரமாக மாறத் தொடங்கியது. மக்கள் விரும்பும் கலைஞனாக மாறிப் போனான். புகழ் வளரத் தொடங்கும்போதே பிரச்சனைகளும் இரயில் வண்டிபோல் உடன் வரத் தொடங்கியது. தொழில் நிமித்தமாகப் பல பெண்களுடன் நெருங்கி பழக வேண்டிய சூழல் உருவானது. சமூக வலைதளத்தில் அவனுக்கு வருகின்ற பதிவுகள், பின்னூட்டங்கள் அவளை இம்சித்தன. இதனால் சந்தேகம் என்னும் நோய் அவளுக்குள் வேர் விட்டு வளரத் தொடங்கியது. ஆரம்பத்தில் சிறு தூறலாக ஆரம்பித்த பிரச்சனை பின்னர்ப் புயலாக உருவெடுத்து. அதன் விளைவு வாக்குவாதங்கள் வலுத்தன. அவன் நடிப்புத்தொழிலை விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல வற்புறுத்தினாள். ஆனால், அவனுக்கோ அது வேலை என்பதையும் தாண்டி மனதுக்கு ஒரு ஆத்ம திருப்தியை அளிக்கின்ற ஒரு விஷயமாக உருமாறிவிட்டிருந்து. இனி மேல் அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்ப்பது என்பது இயலாத ஒன்றாக அவனுக்கு இருந்தது. அதுமட்டுமன்றி வாய்ப்புகள் கிடைக்கும் வரை தொடர்ந்து விட்டுப் பின்னர்ச் சொந்த தொழில் ஆரம்பித்து இதிலிருந்து விலகி விடுவது அவனது எண்ணமாக இருந்தது. ஆனால், அவளோ உடனே இதைத் தலை முழுகிவிட்டு வர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள். அவளின் பிடிவாதம் கண்ணை மறைக்க அவன் கூறியது எதையும் அவள் கேட்க தயாராக இல்லை. இவனும் அவளுக்குப் புரிய வைக்கப் பல வகைகளில் முயன்று தோற்றுப் போனான். அவள் முடிவை அவனால் மாற்ற இயலவில்லை ஒருசமயம் சூட்டிங் முடிந்து அவசரமாக வீட்டிற்கு வந்துவிட்டான். வீட்டிற்கு வந்த பிறகுதான் நாடகத்தில் நடித்த நடிகையின் லிப்ஸ்டிக் அவன் சட்டையில் ஒட்டியிருப்பதை அறிந்தான். அன்று அவர்களின் சண்டை வலுத்து ஒரு முடிவுக்கு வந்தது. நம்பிக்கை பொய்த்தப்பின் சேர்ந்து வாழ்வது என்பது நடிப்பதை விட கஷ்டமானது என்பதை உணர்ந்தான். அதனால் அவள் பிரிந்து விடலாம் என்று சொன்னபோது அவனும் சரியென்று ஒப்புக்கொண்டான். ஆனால், அதனை நினைத்து அவன் பல நாள் வருந்தி இருக்கிறான். அவளைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது அது அவனுக்குத் தோல்விலேயே முடிந்தது. அவள் முடிவில் உறுதியாக நின்றாள். அவனும் வேறு வழியின்றி அவள் கேட்ட விவாகரத்திற்கு ஒப்புக்கொண்டான். இருவரும் கருத்து ஒத்துப் பிரிந்ததால் வழக்கும் சிக்கல் இல்லாமல் முடிந்தது. அவன் மாமா வக்கீல் என்பதால் வழக்கை எளிதில் முடித்துக் கொடுத்துவிட்டார். வழக்கின் இறுதி நாள் அன்று அவளைக் கடைசியாகப் பார்த்தது. அதன் பின் அவளுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போனது. அவளின் நினைவுகளிலிருந்து விடுபட அவன் தொழிலில் தன்னை மூழ்கடித்துக்கொண்டான். விவாகரத்துக் கிடைத்தவுடன் அம்மா மறுமணத்திற்கு அவனை நச்சரிக்கத் தொடங்கினார். இவனும் பிடி கொடுக்காமல் நழுவிக்கொண்டே இருந்தான். இந்த நிலையில் அவனுடைய அம்மாவிற்கு நெஞ்சு வலி காரணமாக உடல் நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் இருந்தபோது அம்மாவின் வற்புறுத்தலை அவனால் மறுக்க முடியவில்லை. உடனே மாமா மகள் வெண்பாவை பேசி முடித்துவிட்டார். இன்னும் பத்து நாளில் திருமணம். இந்நிலையில் நந்தினியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி அவனை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டு அவளைச் சந்திக்கச் செல்வது அவனுக்குச் சரியாகப் படவில்லை. என்ன பதில் அனுப்புவது என்ற சிந்தனையில் இருந்தவனை அணலின் கீச்சிடும் சத்தம் கலைத்தது. அது மரத்தில் இருந்து இறங்கி அவனிடம் ஏதோ சொல்ல வருவதுபோல் வந்து ‘குறுகுறு’வென்று பார்த்துவிட்டு வேகமாக மரத்தில் ஏறி மறைந்து கொண்டது. அதைப் பார்த்தும் அவன் மனத்தில் நந்தினியின் முகம் நிழலாட தொலைபேசியை எடுத்து ‘மாலை நான்கு மணிக்கு வழக்கமான இடத்தில் சந்திக்கலாம்’ என்று பதில் அனுப்பினான். அவன் அனுப்பிய மறுநிமிடத்தில் ‘கண்டிப்பாக வந்து விடுகிறேன். நன்றி’ என்று அவளிடமிருந்து பதில் வந்தது. அதைப் பார்த்தும் அவனின் இதழ் கடையோரம் புன்முறுவல் தோன்ற அதைப் பார்த்தபடி இருந்தான்.

சற்று நேரத்தில் அவளின் நினைவுகளிலிருந்து விடுபட்டவன் படப்பிடிப்பிற்குச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை உதிக்க நேரத்தைப் பார்த்தான். சிறிய முள் ஒன்பதிலும் பெரிய முள் மூன்றிலும் நின்று மணி ஒன்பதேகால் என்றது. இப்பொழுது கிளம்பினால் படப்படிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்று தயாராவாதற்குச் சரியாக இருக்கும் என்ற எண்ணம் தோன்ற அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினான். இனம் புரியாத மகிழ்ச்சி அவன் உள்ளம் எங்கும் பரவி நின்றதை அவனால் உணர முடிந்தது.

அன்று ஷுட்டிங்கில் பல டேக்குகள் வாங்கி ஒரு வழியாகக் காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு மூன்று மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டான். ஒரு விதமான பரபரப்பு அவன் உடலில் தொற்றிக்கொண்டதை அவனால் உணர முடிந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகான சந்திப்பு என்பதால் எதிர்பார்ப்புகள் நிறைந்த அந்தச் சந்திப்பை எதிர் நோக்கி பயணிக்கத் தொடங்கினான்.

தேசியப்பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது இருவரும் அடிக்கடி செல்லும் இடம் வெஸ்ட்கோஸ்ட் கடற்கரைதான். மாலை நேரத்தில் கடற்கரை காற்றை அனுபவித்தபடி காலார நடப்பது அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. கடலைப் பார்த்து உட்கார்ந்துகொண்டு மெக்டோனால்ஸ்ஸில் வாங்கிய சின்னச் சின்னப் பொறித்த கோழியைச் சுவைத்துக்கொண்டு இருவரும் மணிக்கணக்கில் அளவளாவிக் கொண்டிருப்பார்கள். ஆனால், கடந்த ஓர் ஆண்டுகளாக அங்குச் செல்வதையே மறந்து போய் விட்டது அப்போது அவன் நினைவுக்கு வந்தது. வண்டியை நிறுத்திவிட்டு அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். எதற்காக வரச் சொன்னாள் என்ற கேள்வி அவனுள் வட்டமிட்டுக்கொண்டேயிருந்தது. அவனுடைய பாதங்கள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக்கொண்டிருக்க ஆனால் உள்ளமோ அதற்கு முன்னால் அவளை நோக்கி பாய்ந்தோடியது.

அன்று வாரநாள் என்பதால் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. சிலர் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மெதுவோட்டம் ஓடிக்கொண்டிருந்தார்கள். புல்வெளியில் ஒருவர் பட்டத்தைப் பறக்கவிடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அதற்கு எதிரே இருந்த இருக்கையில் இவனுக்குப் பிடித்த வெள்ளைப்பூக்கள் இறைத்த நீலநிறச் சேலையில் பதுமைபோல் நந்தினி அமர்ந்திருந்தாள். காற்றில் அலைபாயும் கூந்தலை அடக்க முயற்சித்துத் தோற்றுப்போய்க் கொண்டிருந்தவளிடம்

‘ஹாய் நந்தினி! எப்படியிருக்கே? வந்து ரொம்ப நேரமாச்சா?’

‘இப்பதான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி வந்தேன். நீங்க எப்படியிருக்கீங்க கார்த்திக்?’

‘ம்ம்ம்…. இருக்கேன். ஏதாவது சாப்பிடுறதுக்கு வாங்கிட்டு வரட்டுமா?’

‘எனக்கு ஒண்ணும் வேணாம்’

‘உனக்குப் பிடிச்ச மெக்டோனால்ஸ் சிக்கன்’

‘இப்ப எதுவும் வேணாம்’

அதன்பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் காற்றின் வேகத்திற்குத் தக்கப்படி மேலும் கீழும் அல்லாடிக்கொண்டிருந்த பட்டத்தைப் பார்த்தபடி இருந்தனர். சற்று நேரம் இருவருக்கும் இடையில் மௌனம் மட்டும் பேசிக்கொண்டிருந்தது. அவளிடமிருந்து வந்த லேவண்டர் மணத்திலிருந்து விடுபட்டவன்

‘சொல்லு நந்தினி. ரொம்ப நாளைக்குப் பிறகு உன்கிட்ட இருந்த வந்த குறுஞ்செய்தியை பார்த்தபோது எனக்கு இன்ப அதிர்ச்சியா இருந்தது. அதுவும் நேர்ல பார்க்கனும்ன்னு சொன்னவுடனே எனக்குள்ள பதட்டம் அதிகமாயிடுச்சு. உனக்கு ஒன்னுமில்லையே?’

‘எனக்கு ஒன்னும் இல்ல. உங்களை நேர்ல பார்த்து பேசனும்னு தோணிச்சு அதான்’

‘இப்பவாவது எங்கூட உனக்குப் பேசனும்ன்னு தோணிச்சே ரொம்பச் சந்தோஷம்’

‘இப்படியெல்லாம் பேசி என்ன கஷ்டப்படுத்தாதீங்க கார்த்திக். ஏற்கனவே நான் எடுத்த முட்டாள்தனமான முடிவை நெனச்சு ரொம்ப வருத்தத்துல இருக்கேன். உங்களப் பார்த்து பேச கூடிய அருகதையை நான் எப்பவோ இழந்துட்டேன். நீங்க எவ்வளவோ எடுத்துச் சொன்னீங்க. ஆனா புத்திக்கு உரைக்கல. ஆனா உங்களைப் பிரிஞ்சு இருந்த காலத்துல நான் பல விஷயங்களை உணர்ந்துட்டேன். இரண்டு நாளைக்கு முன்னாடி உங்களோட வக்கீல் மாமா இந்தப் பத்திரிக்கையை அனுப்பியிருந்தாரு. அவள் கைப்பையைத் திறந்து அதிலிருந்து அவனுடைய திருமணப் பத்திரிக்கை எடுத்து அவர்களுக்கிடையில் வைத்தாள்.

அதைப் பார்த்தும் அவன் ஒன்றும் பேசவில்லை. அவள் தொடர்ந்தாள்.

‘அதைப் பார்த்தபோது மனசுக்குக் கொஞ்சம் பாரமா இருந்தது. அப்புறம் எனக்கு என்ன உரிமை இருக்குன்னு என்னை நானே கேட்டுகிட்டு என் மனச தேத்திகிட்டேன். திருமணத்திற்கு வாழ்த்து சொல்லிட்டு அப்படியே உங்களை ஒருமுறை நேரடியா பார்த்துப் பேசனும்னுபோல இருந்தது. முன்னவிட இப்போ இன்னும் அழகா இருக்கீங்க கார்த்திக். ரொம்ப நல்லா நடிக்கிறீங்க. வசந்தத்துல வர்ற உங்க நாடகத்தை ஒன்னுவிடாம பாத்துடுவேன். இப்போயெல்லாம் பெண்களோட நீங்க நெருக்கமா நடிக்கிற காட்சியைப் பார்க்கும்போது எனக்குக் கோபமே வர்றதில்லை. அப்புறம் விவாகரத்து ஆனவுடனே எனக்கு நீங்க கொடுத்த பணத்துக்கான காசோலை இது. இதை என்னோட கல்யாண பரிசா உங்களுக்குக் கொடுக்குறதுக்காகத்தான் வரச் சொன்னேன்’ என்று சொல்லிக்கொண்டே காசோலையை அவனிடம் நீட்டினாள். அப்போது காற்று சற்றுப் பலமாக வீச, அவர்களுக்கிடையில் இருந்த பத்திரிக்கை காற்றில் பறக்க யத்தனித்தது. அந்த நொடியில் இருவரது கைகளும் தன்னிச்சையாய் அதனைத் தடுக்க முற்பட்ட, அவர்களின் கைப்பிடிக்குள் பத்திரிக்கை அடங்கியது.

அதுவரை வானில் அலைக்கழிந்து கொண்டிருந்த பட்டம், இப்போது ஒரே சீராக உயரே பறக்க ஆரம்பித்தது.

Exit mobile version