குளியலறைக் கண்ணாடியில் வலது கையைத் தூக்கி மார்புப் பகுதியைத் தடவிப் பார்த்தாள் அனுசுயா. ஒரு எலுமிச்சை அளவில் வளர்ந்திருந்தது அந்தக் கட்டி. கைகளுக்கு கீழே வலி இருந்தது. கடந்த ஒரு மாதமாக சின்ன அளவில் இருந்தது இப்போது பெரிதாகியிருந்தது. சரவணனிடம் இது பற்றி இன்றே சொல்லி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
“அல்ட்ராசௌண்ட்ல பாத்தா நீர்க் கட்டிங்க மாதிரி தான் இருக்குது. எதுக்கும் ஒருவாட்டி பயாப்சி எடுத்துப் பார்த்திடலாம்”. மருத்துவர் ரம்யா கூற அனுசுயாவும் சரவணனும் அதிர்ச்சியாய் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர்.
“பயப்பட வேண்டாம். சும்மா ஒரு கன்பர்மேஷனுக்குத் தான்”.
பத்து நாட்களுக்குப் பிறகு வலி மிகுந்த பயாப்சி முடிந்து சோதனை முடிவுகளோடு மீண்டும் மருத்துவரைச் சந்தித்தனர்.வெகுநேரம் முடிவுகளை ஆராய்ந்தார் அவர். அனு நகங்களைத் தின்றுகொண்டிருந்தாள்.
“எப்படி சொல்றதுன்னு தெரியல…ரெண்டு பேரும் மனச திடப் படித்திக்கோங்க…அனு உங்களுக்கு வந்திருக்கறது மார்பகப் புற்றுநோய். தர்ட் ஸ்டேஜ்… உடனே நாம ட்ரீட்மென்ட்ட ஆரம்பிக்கணும்..”
இருவருமே அதிர்ந்தனர்.
“வாட்???எனக்கா?? டாக்டர்… எனக்கு இருபத்தஞ்சு வயசுதான் ஆகுது.”
“புற்றுநோய்க்கும் வயசுக்கும் தொடர்பில்ல அனு. இப்பல்லாம் எந்த வயசிலயும் வருது.”
“ஆனா நான் தினமும் யோகா ஆரோக்யமான சாப்பாடுன்னு என்னோட லைப் ஸ்டைல கரெக்ட்டா மெயிண்டைன் பண்ணிட்டு வரேன். ஹோட்டல்ல கூட அதிகம் சாப்ட்டதில்ல… எனக்கு எப்படி?? “ஆற்றாமையில் படபடத்தாள் அனு..
“கேன்சர் வரதுக்கு இது தான் காரணம்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தவறான உணவுப் பழக்கத்தினாலயோ வாழ்க்கை முறையினாலயோ வரலாம். நெருங்கிய சொந்தங்களுக்கு வந்திருந்தாலும் வாய்ப்பு இருக்கு. இன்னும் சில பேருக்கு பல நாளா மனசுக்குள்ள அடக்கி வச்சிருக்கிற கோவம்… பயம்.. தீராத வெறுப்பு மாதிரியான உணர்ச்சிகள் கூட கேன்சர் வர காரணமா சொல்லலாம்.”
“அனுவை முழுசா குணப்படுத்திட முடியும்ல டாக்டர்?” சரவணனின் குரல் நடுங்கியது.“கவலைப்படாதீங்க சரவணன். இப்ப புற்றுநோய் சிகிச்சை முறைகள் எவ்வளவோ வளர்ந்திருக்கு. ஆனா அதைவிட ரொம்ப முக்கியமானது நோயாளியோட மனோதிடம். சிகிச்சையினால சாதிக்க முடியாததக் கூட மனசு சாதிச்சிரும்”
வேதனை இதயத்தைக் கவ்வ அழக்கூடத் தோன்றாமல் உறைந்திருந்தாள் அனுசுயா. அவள் கையைத் தன் கைகளுக்குள் எடுத்து இறுகப் பற்றிக் கொண்டான் சரவணன்.
கல்லூரியில் பூத்த அனுசுயா சரவணன் நட்பு பின்பு இரண்டு வருடக் காதல் ஓராண்டுக்கு முன் திருமணம் எனக் கனிந்திருந்தது. முதலில் உண்டான கரு கலைந்து விட, அனுசுயாவின் உடல் நன்கு தேறியபின் அதுபற்றித் திட்டமிடலாம் என எண்ணியிருந்தனர். அதற்குள் அவர்கள் எதிர்காலத்தையே அசைக்கும் இப்படியொரு பேரிடி அவர்கள் வாழ்வில் விழுந்தது.
அதன் பின் வந்த நாட்களைத் திரும்ப எண்ணிப் பார்க்கவும் பயந்தாள் அனு. முதல் இரண்டு மாதங்கள் கட்டியின் அளவைக் குறைக்க கீமொதெரபி கொடுத்தனர். பின்பு மார்பிலிருந்த கட்டியைப் பெருமளவு சதையோடு அறுவை சிகிச்சையில் வெட்டி எடுத்தார்கள். சிகிச்சையின் தீவிரத்தால் உருக்குலைந்திருந்தாள் அனு. கீமோதெரபி அவளின் அலைபாயும் கூந்தலைக் காவு வாங்கியிருந்தது.
அடிக்கடி மனச்சோர்வின் பிடியில் சிக்கிக் கொள்ளும் அனுவை மீட்டெடுக்க சரவணன் பெரும்பாடு பட வேண்டியிருந்தது. அவள் பழைய தலைமுடியைப் போலவே ‘விக்’ ஒன்றைச் செய்து அவளை அணியச் செய்தான். இருவருக்கும் மனதுக்குப் பிடித்த, அவர்கள் காதலித்த போது அதிகம் சென்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றான். அவள் விரும்பி ரசித்த பாடல்களைப் போட்டுக் கேட்க வைத்தான். ஆனாலும் அவள் கூட்டுக்குள் அடைந்து கொள்ளும் நத்தையைப் போல சமயங்களில் மனக்கூட்டுக்குள் சுருங்கிக் கொள்வாள்.
அன்று கீமோதெரபி முடிந்து வீடு திரும்பியதும் அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு குழந்தையாய்க் கதற ஆரம்பித்தாள்.
“எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது சரவணா…நான் என்ன பாவம் செஞ்சேன். ஏற்கனவே நான் பட்டுட்டிருக்க கஷ்டம் போதாதா? உங்கூட இருக்கிற இந்த சில வருஷங்கள் தான் நிம்மதியா இருக்கேன். அதுவும் சீக்கிரம் முடிஞ்சுருமா? நான் உன்ன விட்டுப் போயிருவனா??”
அவனுக்கும் விடை தெரியாத கேள்விகளை அடுக்கியவளைப் பற்றிக்கொண்டு ‘ஓ’வென அழத் தோன்றினாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் சரவணன். அவன் அழுதால் அவள் மேலும் பலவீனமாகிவிடுவாள் என்று உணர்ந்து அவளைத் தேற்ற ஆரம்பித்தான்.
“என்னம்மா அனு, சின்னப் பிள்ள மாதிரி… பலவீனமான நேரங்கள்ல தான் நாம முழு பலதோட இருக்கணும்னு நீதானே அடிக்கடி சொல்லுவ. எவ்வளவோ விஷயங்கள அசால்டா கடந்து வந்திருக்க..இதெல்லாம் ஒண்ணுமே இல்லம்மா..எத்தனயோ பொண்ணுங்க இந்த நோயை ஜெயிச்சு அடுத்தவுங்களுக்கும் வழிகாட்டியா வாழ்ந்திட்டு இருக்காங்க தெரியுமா? நாளைக்கு நீயும் அது போல இதுலிருந்து மீண்டு வந்து ஒரு உதாரணமா இருப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடு. நோயை எதிர்த்து சண்டை போட உடம்புல தெம்பு வேணாம்?”
அன்றிரவு அவளைச் சமாதானப் படுத்தித் தூங்க வைத்தவன் வெகுநேரம் தூங்காமல் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
சரவணின் கார் அந்த முதியோர் இல்லத்தின் பெரிய கதவுகளைத் தாண்டி உள்ளே நுழைந்தது.பெயர்ப்பலகையைப் பார்த்தவள் புருவங்கள் சுருங்கின.
“இங்க எதுக்கு வந்திருக்கோம் சரவணா?”
“உள்ள வா சொல்றேன்”அந்த இல்லத்தின் காப்பாளரிடம் சென்று பேசியவன் திரும்பி வந்து அனுவை அழைத்துக் கொண்டு கட்டிடத்திற்குள் நுழைந்தான்.
அங்கு ஓர் விசாலமான அறையில் இடைவெளி விட்டு வரிசையாய் ஸ்டீல் கட்டில்களில் போடப்பட்டிருந்தன. சில முதியோர்கள் புத்தகம் படித்துக்கொண்டும் அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தனர். எல்லாரையும் தாண்டி வலது ஓரத்தில் ஒரு கிழிந்த துணியைத் தைத்துக் கொண்டிருந்த வயதான பெண்மணியிடம் சென்று நின்றான். அவனைத் தொடர்ந்து பின்னே நடந்து வந்த அனு அந்த அம்மாளைப் பார்த்தாள். அடுத்த வினாடி அங்கிருக்கப் பிடிக்காதவளாய் அந்த இடத்தை விட்டு விடுவிடுவென்று வெளியே வந்தாள். அவளுக்கு மூச்சிரைத்தது. பின் வந்த சரவணனிடம்,
“இதுக்குத் தான் என்னக் கூட்டிட்டு வந்தியா? என் வாழ்கையில யார் முகத்தைப் பாக்கக் கூடாதுன்னு இத்தன நாள் நெனச்சிட்டு இருந்தேனோ அவங்கள பாக்க வச்சிட்டியே…சே?”
“என்ன இருந்தாலும் அவங்க உன் அம்மா அனு.”
“ச்சீய்..அந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவங்க.. பெத்துட்டதினாலேயே அம்மாவாகிற முடியுமா? அவங்க பழைய காதலுக்காக என்னையும் அப்பாவையும் விட்டுட்டு போனப்ப எனக்கு ரெண்டு வயசு. அந்த வயசுல தன்னோட குழந்தைய விட்டுப் போக எந்தத் தாய்க்காவது மனசு வருமா?”
“அவங்க செஞ்சது பெரிய தப்பு தான். ஆனா அவங்க தவறை என்னைக்கோ உணர்ந்திட்டாங்க அனு. அவங்க திரும்பி வந்தப்போ உங்க அப்பா தான் ஏத்துக்கிடல.”
“அதுல தப்பிலையே. இவங்க துரோகத்தால தான் எங்கப்பா கொஞ்சங் கொஞ்சமா செத்தாரு. இவங்களால நானும் எங்க அப்பாவும் சந்திச்ச அவமானங்களப் பத்தி உங்கிட்ட சொன்னதில்ல சரவணா. ஓடிப் போனவ மகனு…” அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள மிகவும் பிரயாசப்பட்டாள்.
“எவ்ளோ கூனிக்குறுகியிருக்கேன் தெரியுமா?? ப்ச்..அதெல்லாம் விடு…நாம உடனே கிளம்புவோம் இங்கேருந்து..வா”
“கிளம்பலாம்…உங்க அம்மாவோட..”அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆமா..அவங்களும் இனி நம்மோட தான் இருப்பாங்க.. ”
“இதுக்கு நான் என்னைக்கும் ஒத்துக்க மாட்டேன். என்னை மேல மேல ஏன் சித்ரவத செய்ற..அவங்க ஏற்கனவே ஏற்படுத்திட்டுப் போன வலியே இன்னும் ஆறா வடுவா என் மனசுல இருக்…”
“அதைத் தான் மறக்கணும்னு சொல்றேன். அதயே நெனச்சிட்டு இன்னும் எத்தன காலம் தான் உன்ன நீயே வருத்திக்கப் போற?” அவன் வார்த்தைகளில் இருந்த கடுமை அவளை வாய் மூடச் செய்தது.
“சின்ன வயசுலேயே பெரிய கஷ்டங்கள அனுபவிச்சிட்ட அனு. இன்னைக்கு நீ வாழ்க்கையில மேல வந்திட்டாலும் உங்க அம்மா மேல ஏற்பட்ட வெறுப்பும் வன்மமும் உன் மனசிலேயே தங்கிருச்சு. அந்த அடக்கப்பட்ட உணர்ச்சிகள் உன் மனசில மட்டுமில்லாம உன் உடம்பிலயும் புற்று கட்டு வளர ஆரம்பிச்சிருச்சு. அத அழிக்கணும்னா ஒரே வழி தான் இருக்கு”‘என்ன ’ என்பது போல் அவனை ஏறிட்டாள் அனுசுயா.
“நீ உங்க அம்மாவை முழுசா மன்னிச்சு ஏத்துக்கணும்”.
“நோ..அது கனவுலயும் நடக்காது.” கோபத்தை அடக்கிக் கொண்டு உறுமினாள்.
“நடக்கணும். நாம நினச்சா முடியாதது இல்ல. தப்பு செய்யாதவங்கன்னு யாரும் இல்ல. சில சூழ்நிலைகள்ள நாமளும் நெறைய தவறுகள் செய்றோம்தான். இந்த உலகத்தில மன்னிக்க முடியாத தவறுகள்னு எதுவும் கிடையாது. உங்க அம்மா செஞ்ச தப்புக்கு இத்தன நாள் தனி மரமா இருந்து தண்டனைய போதியமட்டும் அனுபவிச்சிட்டாங்க. ”
“ஆனா தப்பே செய்யாம நானும் இத்தன நாள் தண்டனைய அனுபவிச்சிச்சிட்டு இருக்கேனே..”
“அத தண்டனையா இல்லாம சின்ன வயசிலயே உன்னப் பலமுள்ளவளா செதுக்க ஆண்டவன் கொடுத்த சோதனையா நெனச்சுக்கோ. உடனே நீ மாறணும்னு சொல்லல.. கொஞ்சம் கொஞ்சமா உம்மனசுல புரையோடிப் போயிருக்கிற அந்தக் காயத்த குணப்படுத்தலாம். அதுக்கான முதல் படியா இத எடுத்துக்கோ. இப்ப எங்கூட உள்ள வா”.
“வீட்டுக்குள்ள வாங்கம்மா…இனி இது உங்க வீடு”. சரவணன் அன்புடன் அழைத்தாலும் விலகி நின்றபடி எங்கோ பார்த்துக் கொண்டிருக்கும் தன் மகளைத் தயக்கத்துடன் நோக்கினாள் சகுந்தலா.
“அனு..அம்மாவை உள்ள கூப்பிடு.. ம்ம்ம்…”
“உள்ள வாங்க..”, என்று நிறுத்தியவள், சரவணன் பார்வையால் கண்டிக்கவும் “அம்மா….” என முடித்தாள்.
அந்த அழைப்பில் உருகிய சகுந்தலா தன் மகளைக் கட்டிப் பிடித்து கண்ணீர் சிந்தலானாள். முதலில் உணர்ச்சியற்று நின்ற அனு பின் கட்டுப்படுத்த முடியாமல் ஒரு கேவலுடன் தாயைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். சரவணனின் விழிகளிலும் கண்ணீர் வெள்ளம்.
“கங்குராஜூலேஷன்ஸ் அனு. ஐந்து வருஷங்களக் கடந்திட்டீங்க. புற்றுநோய் வந்தவுங்களுக்கு இது ஒரு முக்கியமான மைல்கல். இதத் தாண்டிட்டா இனி புற்றுநோய் வரும் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லைனே சொல்லலாம்.”
“எல்லாத்துக்கும் காரணம் எங்கூட துணையா நின்ன சரவணனும் எங்க அம்மாவும் தான் டாக்டர். அப்புறம் இந்த குட்டி தேவதைய மறந்திட்டேனே” என்றபடி தனது கையிலிருந்த தன் இரண்டு வயது மகளைத் தூக்கிக் கொஞ்சினாள் அனுசுயா.
-தினமலர் வாரமலர் (அக்டோபர் 2018)