கரும்பலகையில் சூரியன்
‘பாப்பா என்ன வரயற?’
‘சூரியன் வரையறன்’
மேற்கில் மறைந்த
சூரியன்
கரும்பலகையில் எழுந்தான்
பல்லாயிரம் கைகளோடு
??????????????????????????
புதன் கிழமை
இன்னக்கி தேதி என்ன
பதினேழு
நாளைக்கி என்ன கிழம?
புதன் கிழமை
புதன் கிழமைன்னா என்னாப்பா?
குழந்தையின் அப்பா சிரித்தபடி நகர
எனக்கோ
நாட்காட்டி நகரவேயில்லை
மனசெல்லாம் புதன் கிழமை
??????????????????????????
சின்னத் தமிழ் அய்யா
இடுப்பிலே வேட்டியில்லை
தோளிலே துண்டுமில்லை
படிய வாரிய தலை
நெற்றியிலே குங்குமப் பொட்டு
பாக்கெட்டில் இங்க் பேனா
எப்போதும் பேண்ட் சர்ட்
காதிலே முடிகள் நீளும்
மணக்கும் அத்தர் வாசம்
காலையில் முதல் வேலை
பள்ளியை சுத்தம் செய்தல்
சற்றே தாமதமானால்
காலில் கோடிழுக்கும் ஈச்சம் பிரம்பு
ஓடித்தப்பித்தல் எங்களுக்கு
தினந்தோறும் விளையாட்டு
மரத்தடியில் தமிழ் படிக்க
பாக்கியம் செய்திருந்தோம்
எப்போதும் எனைப் புகழ
காற்றிலே மிதப்பேன் நானும்
பள்ளி இறுதி வகுப்பில் தமிழில்
சற்றே மதிப்பெண் குறைய
இன்னும் அழுகிறேன் நான்
தம்பியின் திருமணத்தில்
கம்மிய குரலில் சொன்னார்
‘நான் உங்களையெல்லாம்
அப்படி கஷ்டப்படுத்தியிருக்க வேண்டாம்’
மனசிலே உயர்ந்து நிற்க
அனைவரும்
வீழ்ந்தோம் காலில்
இக்கவிதையும் தாங்கள் கருணையுடன்
இட்ட பிச்சை
எத்தனை பிறவி எடுத்தும்
ஈடு செய்ய இயலாதய்யா
??????????????????????????
மாதிரிக் கவிதை
அலைபேசியில் அழைத்தவர்
சொன்னார்
‘தங்களின் கவிதைகள் எல்லாம்
தகவல் மட்டுமே
தருகிறது என்று’
வாழ்பவனுக்கு
வாழ்ந்தவன்
தகவல்
பின்னேர் ஓட்டுபவனுக்கு
முன்னேர்
தகவல்தானே
என் வாழ்வு
உமக்கொரு தகவலில்லையா?
படிமமும் உருவகமும்
வாசிப்பவனுக்கெதற்கு?
தேமாவும் புளிமாவும்
சீரும் விருத்தமும்
படிப்பவனுக்கெதற்கு?
கவிதையோடு
கோனாரும்
வேண்டுமெனில்
யாரின் தோல்வியது?
வரிகள் குறைவு எனில்
குறள் கவிதை
இல்லையா?
எளிமைதான்
பிரச்சினை என்றால்
புதுக்கவிதையின்
இலக்கணம் சொல்வீர்
தராசின் தட்டு
சாய்ந்தால்
தராசும் துருப்பிடிக்கும்
அழைத்தவர்
மேலும் சொன்னார்
அனுப்புகிறேன் புத்தகத்தை
படித்து விட்டு
எழுதுங்கள் என்று
மாதிரிக் கவிதை படித்து
மாதிரிக் கவிதை எழுத
மாதிரிக் கவிஞன் இல்லை
மன்னிக்க
வேண்டும் அய்யா!
??????????????????????????
யாருடைய கை
விடுமுறைக்கு சென்ற
பிள்ளைகளை திரும்ப அழைத்து வருகையில்
மதிய உணவுக்கு
பிரியாணி தேட
புகாரி
ஆர் ஆர்
தலப்பாக்கட்டி
கிடைத்தது என்னவோ
தரிசனம்
குங்குமம்
புளிசாதம்
அற்புதம்