மின்கிறுக்கல்

ஊழ் (9)

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

விமான டிக்கெட் முன்பதிவு செய்ய எதிரே இருந்த கணினியின் அருகில் வந்து கீபோர்டை தட்டினான் அமுதன். கணினித் திரை ஒளிர்ந்தது அதை மது ‘ஷட்டவுன்’ செய்யாமல் சென்றிருந்ததால் கடவுச்சொல்லைக் கேட்கும் பக்கத்தைக் காண்பித்தது. அதில் கடவுச்சொல்லைத் தட்டி உள்ளே நுழைந்தான்.

கணினித்திரையில் அவனும் ஆண்ட்ரியாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது. கீபோர்டை தட்ட தட்ட அவன் ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வரிசையாக வந்துகொண்டே இருந்தன. அதிர்ச்சி அவன் முகத்தில் அப்பியிருந்தது. எங்கிருந்து இத்தனை படங்கள் வருகின்றன? கவனித்தான், கணினியுடன் இணைந்திருந்த மெமரி கார்டில் இருந்து வந்துகொண்டிருந்தது. அங்கு அருகிலேயே வேலையே செய்யாது என்று எப்போதோ தூக்கிப்போட்ட ஒரு பழைய அலைபேசி திறந்துகிடந்தது. அதற்குள் இருந்த மெமரிக் கார்டை எடுத்துப் பார்த்திருக்கிறாள் மது.

அமுதன் யோசனையில் மூழ்கினான். அவனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற நிகழ்வுகளை அசைபோட்டான்.

இவள் இதை நேற்றே பார்த்திருக்க வேண்டும். முந்தாநாள் தான் வீட்டில் இருக்கும் மெமெரிக்கார்டுகளை ஒழுங்குபடுத்தி அதில் உள்ள புகைப்படங்களை எல்லாம் கணினியில் ஏற்றப் போவதாகக் கூறினாள். வேண்டாத பழையபொருட்களான அவன் பயன்படுத்திய வாக்மேன், ஐபாட், பழைய நோக்கியா போன் இப்படி பல பொருட்களை ஒரு பெட்டிக்குள் போட்டு வைத்திருந்தான். அதில் கிடந்த இந்தப் பழைய போனை எடுத்து அதற்குள் இருக்கும் மெமரிக் கார்டை சுத்தம் செய்வாள் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. இதை நேற்று பார்த்ததால் தான் நேற்றிரவு தலைவலி என்று கூறி சரியாக பேசாமல் இருந்திருக்கிறாள். இன்று ஆண்ட்ரியாவுடன் பேசியது அவளுக்குக் கிடைத்த போனஸ். விதி அவனை வலுவாகப் பிணைத்து அடித்துத் துவைத்து எங்கோ இழுத்துச் செல்வது மட்டும் அவனுக்கு நன்றாக தெரிந்தது.

இவனுக்கும் ஆண்ட்ரியாவிற்கும் பிறந்த குழந்தை என்று ஒரு குழந்தையின் புகைப்படம், மது இவன் பெயரில் ஆண்ட்ரியாவுடன் நடத்திய வாட்ஸ்அப் உரையாடல், இப்போது இந்தப் புகைப்படங்கள். இவளிடமிருக்கும் அத்தனை ஆதாரங்களையும் காண்பித்தபின் அவன் சொல்லப்போகும் எந்தப் பொய்யையும் ஏன் மெய்யாக இருந்தால் கூட இனி யாரும் அவனை நம்பப் போவதில்லை.

இப்போது அவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அவள் இதை யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டும். அவள் ஒருத்தியை மட்டும் என்றால் கை கால்களில் விழுந்து எப்படியாவது சரிகட்ட முயற்சி செய்வான்.

அவன் வீட்டில் இருக்கும் யாரிடமும் இதைப் பற்றி விவாதிக்கும் துணிச்சல் அவனுக்கு இல்லை.

கணினி முன் இருந்த இருக்கையில் சாய்ந்துகொண்டு தலையைத் தேய்த்துக்கொண்டு தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தான்.

“ஊரில் உள்ள ஒவ்வொருவரும் என் மூஞ்சியில் காறி உமிழ்வார்கள்.”

அலுவகம் சென்று வந்த உடையைக் கூட மாற்றாமல் எழுந்து போய் சோபாவில் விழுந்தான். இரவு முழுவதும் ஓடியது. அவன் மனம் ஏதேதோ சிந்தித்தது.

“இனி ஊரே வேண்டாம் எங்காவது யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு ஓடிவிடலாமா?”

தற்கொலை எண்ணம் பலமுறை வந்தது. தன்னையறியாமல் கண் கலங்கி கண்ணீர் பொங்கியது. “ஆண்ட்ரியாவிற்கு நீ செய்த துரோகமும் பாவமும்தான் இன்று உன்னைப் படுத்துகிறது” அவன் மனம் அவனைக் குத்திக்கொண்டே இருந்தது.

“அவளுக்குத்தான் மாதாமாதம் பணம் அனுப்பினேனே? அவள் பிள்ளை எனக்குப் பிறந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? அவளை எப்படி நம்புவது? ஆண்ட்ரியா என்பதுகூட அவள் உண்மையான பெயர் தானா? ” அவன் மனமே அவனுக்கு ஆதரவாகவும் வாதாடியது.

“மது நல்லவள் இந்த கொஞ்ச நாளிலேயே அவள் இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை எனும் அளவிற்கு என்னுள் நுழைந்து உயிரோடு கலந்தவள். அவளில்லாமல் எனக்கு எதுவும் இல்லை அவளை எப்படியாவது மீட்டு வந்து விட வேண்டும். ஆனால் எப்படி? எப்படி மீட்பது?” சுற்றிச் சுற்றி ஒரே இடத்திற்கு வந்து கொண்டிருந்தது அவன் மூளை.

தலைவலியும் அதிகமாகிக்கொண்டே வந்தது. சோபாவில் இருந்து எழுந்தான். நடந்தான். கணினியைத் தட்டினான். அதே புகைப்படங்கள். தலை மயிரை கொத்தாகப் பிடித்துக்கொண்டு “ஹா… ஹா…” என்று தனக்குத்தானே அரற்றிக்கொண்டான். மீண்டும் சோபாவில் வந்து விழுந்தான். நேரம் ஓடியது. பின்னிரவில் பசிக்கத் தொடங்கியது குழாய்த்தண்ணீர் பிடித்துக் குடித்தான். சாப்பாட்டை நினைக்கும் அளவிற்கு எல்லாம் அவனுக்கு நேரம் இல்லை. அவன் மனம் இடைவெளியில்லாமல் மதுவையே சிந்தித்துக்கொண்டிருந்தது. அதிகாலையில் ஏதோ ஒரு தருணத்தில் தூங்கிப்போனான்.

தூங்கிய வேகத்தில் காலை ஆறு மணிக்கெல்லாம் மது அவனை எழுப்பிவிட்டாள். கண்களை முழித்துப் பார்த்தான் இருள் சூழ்ந்திருந்தது.

“மது… மது… மது…” குழாயில் இருந்து தண்ணீரைப் பிடித்து மூஞ்சியில் திரும்பத் திரும்ப அடித்துத்தான்.

“எத்தனை முறை கழுவினாலும் நான் செய்த பாவம் என்னை விட்டுப் போகப் போகப் போவதில்லை. நான் பாவி. நான் பாவி” என்று கண்ணாடியைப் பார்த்து கத்தினான்.

பல்லை விளக்கினான். உடைகளை கழற்றி எறிந்துவிட்டு கட்டிலில் விழுந்து மறுபடி தூங்கினான்.

மீண்டும் எழுந்த போது மணி காலை 11.30 ஆகியிருந்தது. அலைபேசியை எடுத்துப் பார்த்தான் அது சுத்தமாக சக்தியிழந்து அணைந்து போயிருந்தது. சார்ஜரில் செருகிவிட்டு குளியலறைக்குச் சென்று குளித்தான். ஹீட்டர் போடவில்லை. சவரில் இருந்து அடர் தூறலாக ‘ சொர் ‘ என்று தண்ணீர் அவன் தலைமீது விழுந்துகொண்டே இருந்தது. அவனுக்குள் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பு எப்படியாவது அணைந்துவிடாதா என்ற ஆவலில் அப்படியே நின்றுகொண்டிருந்தான். அவன் உஸ்ணத்தை தணிக்க முடியாத அந்த தண்ணீர் அவன் தலையில் இருந்து கால் வரை தாவிக் குதித்து அதன் இயலாமையை கூற முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது.

குளித்து முடித்து அவன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான் முப்பத்தி இரண்டு சதவீதம் என்று காண்பித்தது. ஓரத்தில் இருந்த பொத்தானை அழுத்திப் பிடித்தான் அதுவும் தன் தூக்கத்தில் இருந்து விழித்தது. அவன் அலுவக நண்பர்களிடமிருந்து “ஏன் வரவில்லை” என்பது போல் கேட்டு வாட்ஸ்ஆப்பில் சில மெசேஜ்கள் வந்திருந்தன. அவர்கள் யாருடனும் பேசும் மனநிலையில் அவன் இல்லை. அவன் மேலாளரிடம் மட்டும் உடல்நிலை சரியில்லை என்று ஒரு குறுஞ்செய்தி மூலம் விடுப்பை அறிவித்தான்.

“மது முதலில் பொன்னமராவதியில் இருக்கும் அவள் வீட்டிற்கு சென்றிருப்பாளா? ” மதுவின் இந்திய எண்ணுக்கு முயற்சி செய்தான். அவள் எடுக்கவில்லை மீண்டும் மீண்டும் முயற்சி செய்தான். சில முயற்சிகளுக்குப் பின் அது அமத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தது.

“என்ன செய்வது? யாருக்கு அழைப்பது? அவளிடம் எப்படியாவது பேசியாக வேண்டும். அவள் இங்கு என்னைப்பற்றி கண்டறிந்ததை அவள் வீட்டில் சொல்லியிருப்பாளா? அவள் முதலில் அவள் வீட்டிற்கு போய் சேர்ந்திருப்பாளா? வேறு எங்காவது சென்றிருந்தால் என்ன செய்வது?” அவள் தோழி யாருக்காவது அழைப்பதற்கு அவர்கள் அலைபேசி எண் எதுவும் கிடைக்குமா என்று தேடிப்பார்த்தான். ஒன்றும் அகப்படவில்லை.

“அவள் தந்தைக்கே அழைத்துப்பார்க்கலாமா?” அவன் மூளையின் சூடு அதிகமாகிக்கொண்டே இருந்தது. கோடாலித் தைலத்தை எடுத்து நெற்றியில் தேய்த்துக்கொண்டான்.

“சரி அவளின் தந்தைக்கே அழைப்போம். எப்போதும்போல அவரிடம் நலம் விசாரிப்பதுபோல் பேசலாம் அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை வைத்து அவள் அங்கே சென்றிருக்கிறாளா என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.”

யோசித்துவிட்டு அவரின் எண்ணை அலைபேசியில் தேடி அழைத்தான். சில முறை ‘டிரிங்…டிரிங்…டிரிங்… ‘ என்று அழைப்பு சென்றுகொண்டே இருந்தது. அழைப்பு எடுக்கப்பட்டது.

“ஹலோ…. மாமா….” என்றான்.

எதிர்முனையிலிருந்து “டேய் நாயே… தெருப்பொறுக்கி… என் தங்கச்சி வாழ்க்கைய இப்படி பாழாக்கிட்டியேடா… இன்னும் எத்தனை பொண்ணுகளைடா இப்படி ஏமாத்திருக்க.. பொம்பளைப் பொறுக்கி…” தடித்த வார்த்தைகளைத் தொடர்ந்து அவன் தாய் சகோதரியை இழிவுபடுத்தும் பல கெட்டவார்த்தைகளும் வந்து விழுந்துகொண்டே இருந்தன.

பேசியவன் மதுவின் அண்ணன்.

************************************** 

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

************************************** 

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 10

Exit mobile version