மின்கிறுக்கல்

ஊழ் (16)

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

காவல்நிலையத்திற்குள் இருந்து அவசர அவசரமாக ஓடி வந்தவன் “என்னன்னு தெர்ல, உள்ள ஒரே சத்தமா இருந்துச்சு இப்போ அந்தப் பொண்ண உள்ள கூட்டிட்டு போறாங்க. அடுத்து அமுதனையும் கூப்ட்டாலும் கூப்பிடுவாங்க” என்றான்.

அமுதனுக்கு ஆவல் தொற்றிக்கொண்டது. நான்கு நாள்களுக்குப் பின் மதுவைப் பார்க்கப் போகிறான். ‘எப்படியாவது அவளிடம் பேச வேண்டும். பேசிவிட்டால் என்னை அவள் புரிந்துகொள்வாள்.’ அவன் உள்மனம் அவனை காவல்நிலையத்தை நோக்கி உந்தித் தள்ளியது. சற்று முன்னே போய் மோட்டார் சைக்கிள்காரன் திரும்பிச் சென்ற திசையை நோக்கிக் கொண்டே நின்றான். நேரம் சென்றுகொண்டே இருந்தது.

“போடா போய் காருக்குள்ள உட்காரு” என்றார் அவன் அப்பா. மணி பத்தை தாண்டியது. மோட்டார் சைக்கிள்காரர்கள் திரும்ப வந்தார்கள்.

“என்னன்னு தெரியல. அவங்க எல்லாரும் வேகவேகமா ஸ்டேஷன விட்டு வெளிய வந்து கார்ல ஏறிப் போய்ட்டாங்க” என்றான்.

அவனுக்குப் பின்னால் வழக்கறிஞர் வெங்கட் தன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அமுதன், சீனு மாமா, அப்பா மூவரும் அவர் அருகில் சென்றார்கள்.

“எப்.ஐ.ஆர்லாம் போடல. சும்மா மிரட்டிப் பார்க்குறாங்க. நீங்க கொடுத்த மேர்ஜ் சர்டிபிகேட், பாஸ் போர்ட்லலாம் இருந்த மதுமதியோட கையெழுத்துக்கும் கம்ளைன்ட் பேப்பர்ல இருந்த கையழுத்துக்கும் ரொம்ப வித்தியாசம் இருந்துச்சு. என்ன ஜோடிக்கிறீங்களான்னு பரமசிவம் சார் ஒரு புடி புடிக்கவும் அந்த இன்ஸ்பெக்டர் கம்ளைன்ட் பண்ணின பொண்ணு வந்து சொன்னா ஒத்துபீங்கள்ள அப்படின்னாங்க. அப்பறம் அவங்க லாயர் வெளில போய் பேசிக் கூட்டிட்டு வந்தாரு” என்று கூறி ஒரு இடைவெளி விட்டு அமுதனைப் பார்த்தார்.

“உங்க ஒய்ப் வெறி ஜெனியூன் சார். வந்தாங்க இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்க முன்னாடியே என்னை யாரும் வரதட்சணை எல்லாம் கேட்டு கொடுமைப்படுத்தல மேடம். எனக்கு அவர்கூட வாழ விருப்பமில்லை அவருக்கு வேற ஒரு பொண்ணோட தொடர்பு இருக்கு. அவங்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கு. பட்டுன்னு சொல்லி முடிச்சாங்க. அவங்களை எப்படி மடக்குறதுன்னு பாயிண்ட் எல்லாம் வச்சிருந்தோம் ஆனால் அவங்க அதுக்கு எல்லாம் வேலையே இல்லமா பண்ணிட்டாங்க.”

அமுதனின் வக்கீலே அவளின் நேர்மையைப் புகழும்போது அவனைப்பற்றி அவள் கூறும் அனைத்தும் உண்மை என்று அவர்கள் அனைவரும் நம்பத்தான் செய்வார்கள். அவர்கள் அத்தனைபேர் முன்னிலும் தலைநிமிர தகுதியற்று குனிந்தே நின்றுகொண்டிருந்தான் அமுதன்.

வெங்கட் தொடர்ந்து “அதுக்கப்பறம் கூட அந்த லாயரும் அவங்க அண்ணனும் கூட்டிட்டுப்போய் எவளவோ பேசிப் பார்த்தாங்க ஆனாலும் அவங்க ரொம்பத் தெளிவா என்னை யாரும் எந்தக் கொடுமையும் படுத்தலைன்னு சொல்லிட்டாங்க. பாவம் கொஞ்சம் அழுதுட்டாங்க. அவங்க அண்ணன் எதுவும் கூட்டிட்டு போய் மிரட்டிருப்பான்னு நினைக்கிறேன்.”

அவள் அழுதாள் என்பது அமுதனுக்கு வருத்தத்தைத் தந்தாலும் உள்ளூர அவள் இன்னுமும் அவன் மீது அன்பு வைத்திருப்பதால் தான் அழுதிருக்கிறாள் என்ற எண்ணம் ஒரு குரூர மகிழ்ச்சியைத் தந்தது.

“இப்போதைக்கு கேசு ஒண்ணுமில்லை. டிவோர்ஸ் கேஸ் கோர்ட்டுக்குத்தான் போகணும் ஸ்டேஷன்க்கு வரத் தேவையில்லை நாங்க மத்ததை கோர்ட்ல பாத்துக்கிறோம்ன்னு சொல்லிட்டோம். நீங்க நாளைக்கு காலைல பதினோரு மணிக்கு ஆபீஸ் வந்தீங்கன்னா பரமசிவம் சார் இருப்பாரு. மத்தத அங்க பேசிக்கலாம்.” என்று கூறிவிட்டு வெங்கட் அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

மறுநாள் அமுதனும் அவன் குடும்பத்தாரும் வழக்கறிஞர் பரமசிவத்தின் அலுவலகம் சென்றார்கள். ஐந்தாறு பேரோடு அந்த அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அவர்களைப் பார்த்தவுடன் வெங்கட் வேகமாக வந்து “வாங்க சார் உங்களுக்காக தான் காத்துக்கிட்டு இருக்காரு” என்று கூறி. பரமசிவத்தின் அறைக்கு அழைத்துச் சென்றார். தடிமனாக முழு நாற்காலியையும் ஆக்கிரமித்து கொண்டிருந்தார். நெற்றி முழுவதும் பட்டையடித்திருந்தார். அவருக்கு பின்னால் அலமாரி முழுவதும் சட்டப் புத்தகங்களால் நிறைக்கப்பட்டிருந்தது. மேசை முழுவதும் கத்தை கத்தையாக காகிதச் சுருள்கள் கிடந்தன.

“வாங்க… உட்காருங்க” என்றார்.

அங்கிருந்த மூன்று நாற்காலிகளில் அமுதன், அப்பா, சீனு மாமா அமர்ந்துகொண்டார்கள். வெங்கட் வெளியிலிருந்து ஒரு நாற்காலியை எடுத்து வந்து போட்டு அவர்கள் அருகிலேயே அமர்ந்து கொண்டார்.

லேசாக அவர் அமர்ந்திருங்க நாற்காலியை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டே “நேத்து ஸ்டேஷன்ல நடந்தது எல்லாம் வெங்கட் சொல்லிருப்பான்னு நினைக்கிறேன்… சொன்னானா?” என்றார்.

சீனு மாமா “ம்.. சொன்னாரு” என்றார்.

“அந்தப் பொண்ணு பிடிவாதமா உன்னை வேணாம்ன்னு சொல்லுதேபா. மாறும்ன்னு நினைக்கிறியா?” என்று அமுதனைப் பார்த்து கேட்டார்.

“எனக்கு பேசுறதுக்கு மட்டும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தீங்கன்னா. கண்டிப்பா மாறுவா சார்”

“இப்போ இருக்க சூழ்நிலைல அந்தப் பொண்ணுகூட தனியா பேசுறதெல்லாம் அவ்வளவு சுலபம் இல்லை தம்பி. அவங்க வீட்ல இருக்கவங்களைத் தாண்டிதான் அந்த பொண்ணுட்ட பேச முடியும். முயற்சி பண்ணிப் பார்ப்போம்”

சிறிது இடைவெளிக்குப்பின் “அவங்க இப்போதைக்கு டைவஸ் கேசுன்னு போனாலும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆனாத்தான் டைவஸ் கொடுப்பாங்க. அதனாலதான் அவங்க வரதட்சணை அது இதுன்னு ஜோடிக்கப் பார்த்திருக்காங்க. அந்தப் பொண்ணு கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்தால அந்த மாதிரி கேஸ் போட முடியல. காலைல அவங்க லாயர்கிட்டப் பேசுனேன் உடனே டைவஸ் வாங்க ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லிருக்காங்க.”

“எப்படி இருந்தாலும் ஆறு மாசம் சேர்ந்து வாழணும்ன்னு சொல்லுவாங்களே சார்” என்றார் சீனு மாமா.

“ம்ம்ம்… சரிதான் ஆனால் எல்லா கேசுக்கும் அது முக்கியமில்லை ரெண்டுபேரும் மியுட்சுவலா பிரியிரதுக்கு சம்மதிச்சா அதை கூட ஜட்ஜு வேய்வ் பண்ணிடுவாரு. ஆனால் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகாம டைவஸ் குடுக்க மாட்டங்க.”

“முயுட்சுவலா சம்மதிச்சாதானே சார். நான் சேர்ந்து வாழனும்ன்னு தான் நினைக்கிறேன்” என்றான் அமுதன்.

“அந்தப் பொண்ணு உன் மேல நிறைய குற்றச்சாட்டு வச்சிருக்கே. கண்டிப்பா அந்த பிலிப்பைன்ஸ் பொண்ண சாட்சியா கொண்டு வந்து அவங்களால நிறுத்த முடியாது. இருந்தாலும் உன் சம்சாரம் உன்கூட வாழமுடியாதுன்னு ஒத்தைக்கால்ல நிக்குதே. ஜட்ஜ் என்ன முடிவு பண்ணுவாருன்னு ஜட்ஜ்மெண்ட் அப்போதான் நமக்குத் தெரியும்.”

“வேற ஏதாவது வழில முயற்சி பண்ணி பாக்கலாமா சார்” என்றார் சீனு மாமா.

சீனுமாமாவை நிமிர்ந்து பார்த்த பரமசிவம். தன் தலையை அமுதனின் பக்கம் திருப்பி. “ம்ம்ம் நானும் அதைத்தான் சொல்லலாம்ன்னு நினைச்சேன்.” என்றார்.

**************************************

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

**************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 17

Exit mobile version