மின்கிறுக்கல்

உன்னை நான் சந்தித்தேன்

PC: Vijay Sangarramu

ரங்கநாதன் சாலையில் சென்று கொண்டிருந்த அவன், எதிரே வந்த பெண்ணைப் பார்த்து அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டான்.

அவளே தான். கண்களில் நிரந்தரமாய்க் குடியேறி விட்ட வடிவை எந்தக் கூட்டத்திலும் அவனால் அடையாளம் காண முடியும். அவள் எப்படி இங்கே?

அவள் அவனைப் பார்த்த பின்னும் எந்தச் சலனமுமின்றி வேகமாக கடந்து சென்றாள்.

“எக்ஸ்க்யுஸ் மீ…ஏங்க..கொஞ்சம் நில்லுங்க..” அவள் வேகத்துக்கு தடை போட்டான்.

கேள்விக்குறியோடு திரும்பியவளிடம், “நான்தாங்க பிரேம். நீங்க திவ்யா தானே?”.

“சாரி..நீங்க வேற யாரோன்னு நெனச்சு என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க..ஐ யாம் நாட் திவ்யா.” என்று கூறியபடி திரும்பி நடந்தாள்.

“ப்ளீஸ்..விளையாடாதீங்க..எனக்கு நிச்சயமா தெரியும்..நீங்கதான். நான் உங்கள இதே டிரஸ்ல பாத்திருக்கேன்.” அவள் அதிர்ச்சியில் புருவங்களை உயர்த்தினாள்.

“சாரி..போட்டோலதான்…நீங்க எனக்கு அனுப்பிச்ச போட்டோல.”

அவள் கோபமானாள்.

“என்ன மிஸ்டர்.. வம்பு பண்றீங்களா..வழிவிடுறீங்களா இல்ல போலீஸ கூப்பிடவா?”

“ப்ளீஸ்ங்க…கொஞ்ச நேரம் உங்ககிட்ட பேசணும். நீங்க நிஜமாவே திவ்யா இல்லேன்னா நான் ஒரு பெரிய பிரச்சனைல இருக்கேன்..ப்ளீஸ்..ஐ பெக் யு”. வெளிவரத் துடிக்கும் கண்ணீரோடு கெஞ்சுதலாய்க் கேட்டான்.

நீண்ட பெருமூச்சோடு அருகிலிருந்த சிற்றுண்டி விடுதிக்குள் அவனைத் தொடர்ந்தாள்.

றுமாதம் முன்பு பேஸ்புக்கில் பெங்களூரைச் சேர்ந்த திவ்யா பிரேமுக்குத் தோழியானாள். அவரவர் பதிவுகளுக்கு விருப்பமும் பின்னூட்டமும் இடுவதில் தொடங்கிய பழக்கம் மணிக்கணக்கில் ‘சாட்’ செய்யும் அளவுக்கு வளர்ந்தது. பல ரகசியங்களும் இடமாறின.

அவள் அழகும் அவன் மேல் காட்டிய அக்கறையும் அவனைக் காதலில் விழச் செய்தது. இதை வெளிப்படையாக அவளிடம் தெரிவித்த போது தனக்கு இதுவரை அப்படித் தோன்றவில்லை யோசிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி நழுவினாள். பின்பு அவளிடம் விலகலை உணர்ந்தபோதும், முடிவெடுப்பதற்கு அவளுக்கும் அவகாசம் தர வேண்டுமென அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் கடந்த இரண்டு வாரமாக அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாமல் கலங்கியிருந்த சமயம் தான், அதே தோற்றத்துடன் இவளைச் சந்தித்தான்.

பொறுமையுடன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவளிடம்,

“இதோ…இதுதான் என் திவ்யா” என்று கைப்பேசியை நீட்டினான்.

வாங்கிப் பார்த்தவள் திகைத்தாள்.

“இது உங்க திவ்யா இல்லங்க…சாட்சாத் நானேதான். இதெல்லாம் நான் என் ஐடில போஸ்ட் பண்ணிருந்த போட்டோஸ். இத வச்சு யாரோ உங்கள நல்லா ஏமாத்தியிருக்காங்க. முதல்ல பேஸ்புக்குக்கு ரிப்போர்ட் செய்யணும்”.

அவள் சொல்லச் சொல்ல அவன் முகம் வெளிறியது.

“என்னங்க சொல்றீங்க. நான் நம்ப மாட்டேன். என் திவ்யா பொய்யில்ல.” தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொள்வதுபோல் இருந்தது.

“லவ் மட்டும் தானா..இல்ல காசேதும்..?”

“ஒருதடவை அவசரத் தேவைன்னு இருபதாயிரம் ரூபா வாங்குனா…”

“இருபதாயிரமா…சாருக்கு பாரி பக்கத்து வீடோ?”

“காசாங்க முக்கியம். அப்ப என்னோட காதல்…”

“பிம்பிளிகி பிலேபி”

ங்கேடி போய்ட்ட… ட்ரெயினுக்கு நேரமாச்சு. சீக்கிரம் வா”, சிற்றுண்டி விடுதியிலிருந்து வெளியில் வந்தவளை தோழி அழைத்தாள்.

“இதோ வந்திட்டேன்..ஒரு நிமிஷம்..”

தன் கைப்பையிலிருந்து கைப்பேசியை எடுத்து பேஸ்புக்கைத் திறந்தவள், பிரேமின் ஐடியை ‘பிளாக்’ செய்துவிட்டு தனது ஐடியையும் தற்காலிகமாக ‘டீஆக்டிவேட்’ செய்தாள் திவ்யா.

Exit mobile version