மின்கிறுக்கல்

அழுக்காறு

அம்மா நினைவுறுத்தி
எனக்குள் திணிக்கும் அணையாடை
என் அனுமதியின்றி
புத்தகப் பையில் நுழைந்து கொண்டு
பல்லிளிக்கிறது

என் நெடுந்தூர பயணத்தில்
அந்த நொடிகள்
‘பெரிய மனுஷி’ எனும் கிரீடம்
விருப்பமின்றி தலைக்கேறுகிறது
அடுத்தவனின் கைவிரல்கள் வலுக்கட்டாயமாக
என் நாசித் துவாரத்தை மூடிக்
கொள்கின்றன‌

அம்மாவின் குறும்பார்வையில் அப்பாவின்
மடி சிறுத்துக் கொள்கிறது
நின்றிருக்கும் இரும்பு வேலியின் கனம்
பாதங்களில் நிரந்தரமாகிறது
முட்டுச் சுவரில் எக்கிட
உயர்ந்த காலணிகள் விற்பனைக்கல்ல

ருதுவானது அங்கிகாரமெனில்
மூர்க்கத்தனம் புசிக்கும் இந்த வெற்றுடல்
காட்டுப் பன்றிகளுக்கு இரையாகிப்
போகட்டும்.

Exit mobile version