மின்கிறுக்கல்

அழிச்சுடர்

அழிச்சுடர்

தற்கொலை செய்து கொள்பவர்களை
தியாகிகள் என்கிறார்கள்
கொலை செய்பவர்களை
வீரர்கள் என்கிறார்கள்
மறம் என்பது குருதி சிந்தலா?
கோழைத்தனம் வாழ்வின் அறமா?
வார்த்தைப் பிசாசு தந்திரமானது
கிரமினல்களை
மகா மனிதர்களாக்கும்
நல்லவர்களை காறித்துப்பிக் கேவலப்படுத்தும்
தலைவிரி கோலமாய் நின்றாள்
நெருப்பாய்
அவளது திரேகம் தகித்தது
படையல் வாங்காமல் குளிரமாட்டாள் வடமலுநாச்சி
ஏற்கெனவே சொல்லப்பட்டது
எல்லாரும் அறிந்தது
எவராலும் தீர்க்கப் படவில்லை
உயிர்த் திரவத்தை தீட்டென்கிறாயே
உன் பிறப்பின் ரகசியம்
தெரிந்து கொள்
உதிரமின்றி நீயல்ல யாருமில்லை.
மிகுந்த பாரம்
நெடுந்தூரம்
களைத்தாலும்
போகிறேன்
மனது விரும்பத்தான் செய்கிறது
வாழ்வதற்கு.
நிழலைக் குடிக்கிறேன்
நிழலைச் சாப்பிடுகிறேன்
நிழல் என்னைக் குடித்துச் சாப்பிட்டு முடிக்கிறது

??????????????????????????

சுழற்பாதை

ஒருவன் ஓடுகிறான்
எதிரே வந்தவன் அவனோடு ஓடுகிறான்
இருவர் ஓடுவதைப் பார்த்த மூன்றாமவன் ஏனென்று அறியாமல் ஓடுகிறான்
எழுதுவது கர்ப்ப வேதனை
படிப்பது ரண வேதனை
சும்மாயிருப்பது உயிர் துடிக்கும் வேதனை
அவள் மாடியிலிருந்து குதித்துச் செத்தாள்
இவன் தூக்கிட்டு இறந்தான்
நீலத்திமிங்கலம் உலகம்முழுக்க சுதந்திரமாய் சுற்றித் திரிகிறது.
கிளர்ச்சியால் முகம் சிவக்க
இதழ் கடிக்கிறாள்
மெல்லத் திமிறிச் சிணுங்கி
விலகி ஓடுகிறாள்
தாபத்துடன் பற்றி முத்தங்களை பரிசளிக்கிறான் அவன்
சரணடைகிறேன்
துச்சமாய் ஒதுக்கித் தள்ளாதே
அன்புடை நெஞ்சங்கள் ஒன்று கலந்திடவே
புத்தம் புது ஓலை
புது வண்ண சேலை
பொங்கிடும் அன்பின் பொன் காலை.

??????????????????????????

நிலாக் காலம்

பனித்த கண்கள்
கனிந்த சிவந்த இதழ்கள்
படருகிறது அன்பின் கள்வெறி
எரியும் வீடு
ஆட்கள் உறங்குகிறார்கள்
காலி மது பாட்டில்கள்
தண்ணிக்குள் முதலை
கரையில் புலி
இறக்கையற்ற நான்
குளங்கள் நிறைய குப்பைகள்
கரைகளைச் சுற்றி மனிதக்கழிவுகள்
நீர் தேடும் ஊர்
மழை பெய்யவில்லை
வறட்சி தலை விரித்தாடுகிறது
ஆயிரம் தண்ணீர் விற்கும் கம்பெனிகள்
பறவை கண்களுக்குள் பறக்கிறது
அவள் போய் விட்டாள்
உதிர்ந்த சிறகு
மேனியெங்கும் வண்ணப்பூக்கள் மலர்கின்றன
அவளைப் பார்த்தேன்
இதயம் சிறகடிக்கிறது
கனவு மிருகங்கள்
இரவுக்குள்ளிருந்து வருகின்றன
என் தூக்கத்தைத் தின்று விட்டு ஓடிவிடுகின்றன
ஒட்டடைகளை நீக்கிவிடு
உள்ளத்தை வர்ணம் தீட்டி அழகுபடுத்து
வசிக்க நான் வருகிறேன்.

Exit mobile version