வட்டமாய் சவரசோப்
புசுபுசுவென
சவரத்தூரிகை
சவரக்கத்தியில் பிளேடு
பொறுத்தி
தண்ணீர்க் குவளையுடன்
தயாராவார் அப்பா
சூப்பர் மேக்ஸ்
டோப்பாஷ்
பின்னர் செவன் ஓ கிளாக்
முகமெல்லாம்
வெண் சுண்ணம்
அடித்தபின்
சவரக்கத்தி சற்றென்று
கீழிறங்கும்
மேல்நோக்கி நகர்கையில்
உடல்நடுங்கும்
எங்களுக்கு
எப்போது நாம் செய்வோம்
மனசு கிடந்து ஏங்கும்
முடித்தபின் பார்த்தால்
முகமெங்கும்
காயங்கள்
தவறாமல் எப்போதும்
‘பார்த்து செய்யக்கூடாது’
வார்த்தை மாறாமல் அம்மா
நினைவு தெரிந்த வரை
காயத்திற்கு என்றும்
விடுமுறை விட்டதில்லை
காலையில்
சவரம் முடித்த பின்
வழியும் ரத்தம்
துடைத்துப் பார்த்தேன்
அப்பாவின் காயம்